புதுவையில் புற்றுநோயால் ஆண்டுக்கு ஆயிரம் பேர் உயிரிழப்பு: முதல்வர் தகவல்

புதுவையில் புற்றுநோயால் ஆண்டுக்கு ஆயிரம் பேர் உயிரிழப்பதாக முதல்வர் வே.நாராயணசாமி பேரவையில் வியாழக்கிழமை தெரிவித்தார்.

புதுவையில் புற்றுநோயால் ஆண்டுக்கு ஆயிரம் பேர் உயிரிழப்பதாக முதல்வர் வே.நாராயணசாமி பேரவையில் வியாழக்கிழமை தெரிவித்தார்.
 கேள்வி நேரத்தின் போது, அதிமுக கொறடா வையாபுரி மணிகண்டன் புதுச்சேரியில் புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்பு குறித்து அரசு அறியுமா? அதற்காக எடுக்கப்பட்டும் வரும் நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பினார்.
 முதல்வர் நாராயணசாமி: புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இலவச பரிசோதனை, மருந்துகள் உள்ளிட்டவற்றை அரசு மருத்துவமனை வாயிலாக வழங்கப்படுகிறது.
 ஜிப்மரின் பிராந்திய புற்றுநோய் மையத்தின் ஆதரவுடன் மேம்பட்ட சிகிச்சை அளிக்கப்படுகிறது. தேசிய திட்டத்தின் கீழ், ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கு முகாம்களை நடத்தி வருவதால், இறப்பு விகிதத்தைக் குறைக்க வழி ஏற்படுகிறது. பிராந்திய அரசு மருத்துவமனைகளில் பிரத்யேகமாக பராமரிப்பு வார்டுகளைத் தொடங்கி, மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் முழு செயல்பாட்டில் உள்ளது.
 அதிமுக குழுத் தலைவர் ஆ.அன்பழகன்: புதுவையில்
 10-இல் மூன்று பேர் புற்றுநோயால்தான் இறக்கின்றனர். அனுமதியில்லாமல் வைக்கப்படும் செல்லிடப்பேசி கோபுரங்களில் இருந்து வரும் கதிர்வீச்சுகளும் இதற்கு ஒரு காரணம். கதிர்வீச்சுகளை அளவிடுவதற்கான கருவிகள்கூட புதுவையில் இல்லை. இவற்றை முறைப்படுத்த வேண்டும்.
 மண்ணாடிப்பட்டு தொகுதி உறுப்பினர் டி.பி.ஆர். செல்வம் (என்.ஆர்.காங்கிரஸ்): அரசு மருத்துவமனையில் புற்றுநோய்க்கான தனி சிகிச்சைப் பிரிவு இல்லாத்தால், சிகிச்சை அளிக்கும் போது புற்றுநோய் கட்டியில் கத்திபட்டு விடுகிறது. அவ்வாறு பட்டவுடன் புற்றுநோய் உடல் முழுக்க பரவி இறக்கும் அவல நிலை ஏற்படுகிறது.
 முதல்வர் நாராயணசாமி: மத்திய அரசிடம் தனிப் பிரிவு தொடங்க அணுகினால், ஜிப்மரில் தனிப் பிரிவு உள்ளதால் வேறு இடத்தில் தொடங்க நிதி ஒதுக்க இயலாது என்கின்றனர். புதுவையில் ஆண்டுக்கு ஆயிரம் பேர் புற்றுநோயால் இறக்கின்றனர். புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க புற்றுநோயியல் துறை தேவை. புற்றுநோய் மையம் அமைக்க கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார் முதல்வர் நாராயணசாமி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com