"சிறு, குறு நிறுவனங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' 

இந்தியாவில் உலக மயமாக்கல் கொள்கை அமல்படுத்தப்பட்ட 27 ஆண்டுகளுக்குப் பின் இப்போதைய சிறு, குறு தொழில்நிறுவனங்கள் குறித்த

இந்தியாவில் உலக மயமாக்கல் கொள்கை அமல்படுத்தப்பட்ட 27 ஆண்டுகளுக்குப் பின் இப்போதைய சிறு, குறு தொழில்நிறுவனங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு ஏஐடியுசி மாநிலத் தலைவர் க.சுப்பராயன் வலியுறுத்தினார்.
 புதுச்சேரி ஏஐடியுசி சார்பில் காமராஜர் சாலை ஜீவா சிலை அருகே செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற 132-ஆவது மே தின விழா பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
 நியாய விலைக் கடைகளில் அரிசி, சர்க்கரை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு நியாய விலைக் கடைகளில் சர்க்கரை கிலோ ரூ.13.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.25-க்கு விற்கப்படுகிறது. மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
 இந்த விலை உயர்வுக்கு மத்திய, மாநில அரசுகள் மட்டுமே காரணம் அல்ல. இந்த அரசுகளை ஆட்டுவிக்கும் சக்திகள்தான் விலையை தீர்மானிக்கின்றன. இதைப் பற்றி இடதுசாரிகள் தவிர வேறு யாரும் கவலைப்படுவதில்லை.
 வளரும் நாடுகளின் இயற்கை வளம், சந்தையை கைப்பற்ற உலக வங்கி, சர்வதேச நிதி சந்தைகள் மூலம் கடன் வழங்கப்படுகிறது. வளரும் நாடுகளில் இயற்கை வளங்களை மலிவான விலையில் கொள்ளை அடிக்க கடன் உதவியை பன்னாட்டு நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.
 இந்தியாவில் 1991-ஆம் ஆண்டு உலக மயமாக்கல், தனியார் மயமாக்கல் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டன. அப்போது இந்தியாவில் 5 கோடியே 80 லட்சம் சிறு, குறு தொழில்நிறுவனங்கள் இருந்தன. தற்போது, சில கோடி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. எனவே, இப்போதுள்ள சிறு, குறு நிறுவனங்கள் பற்றிய வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்.
 2016 முதல் 2017 வரை கார்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.2.41 லட்சம் கோடி வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. யாருக்கு தள்ளுபடி செய்யப்பட்டது என்பதை தெரிவிக்க கேட்டும் மத்திய அரசுக்கு மறுத்துவிட்டது.
 நியாய விலைக் கடை முறையை ரத்து செய்ய உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. எனவே, விரைவில் நியாய விலைக் கடைகள் ரத்து செய்யப்படுவது உறுதி.
 பிரதமராக மோடி பொறுப்பேற்றவுடன் அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்றால் யாருக்கும் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என திருத்தம் செய்தார். பாஜகவுக்கு மட்டும் ரூ.1,000 கோடி பணம் வரவு வந்துள்ளது.
 பாஜகவில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகளில் 30 சதவீத பேர் குற்றப்பின்னணி உடையவர்கள் என்ற புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது. இவர்களால் எப்படி மக்களுக்காக நியாயமான முறையில் செயல்பட முடியும் என்றார் சுப்பராயன்.
 கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் அ.மு.சலீம், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் நாரா.கலைநாதன், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இரா.விசுவநாதன், அபிஷேகம், சேதுசெல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com