இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது வருத்தமளிக்கிறது

இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது வருத்தம் அளிப்பதாக புதுவை முதல்வர் வே.நாராயணசாமி கருத்து தெரிவித்தார்.

இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது வருத்தம் அளிப்பதாக புதுவை முதல்வர் வே.நாராயணசாமி கருத்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக புதுச்சேரியில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. இதனால், பொதுமக்களுக்கு எவ்வித பயனும் ஏற்படவில்லை. மாறாக, பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியபடி பொருளாதாரம் 1.5 சதவீதம் குறைந்து, 2 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தைத் திட்டமிட்டு அழித்ததற்கு பிரதமர் நரேந்திர மோடிதான் முழு பொறுப்பேற்க வேண்டும்.
மத்திய பாஜக ஆட்சியை வீழ்த்தி மதச் சார்பற்ற ஆட்சியை அமைக்க அகில இந்திய அளவில் மதச் சார்பற்ற அணிகளை ஒருங்கிணைக்கும் சிறப்பான திட்டத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கியுள்ளார். அவரது முயற்சி நிச்சயம் வெற்றி பெறும். 
கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து  மதச் சார்பற்ற கட்சிகளும் ஒருங்கிணைந்து மத்தியில் ஆட்சியமைக்க வேண்டும். அதுதான் நாட்டின் எதிர்காலத்துக்கு நன்மை பயக்கும். இதை உணர்ந்து அனைத்து அரசியல் கட்சிகளும் செயல்பட வேண்டும். இதற்கு முன்னோட்டமாகவே ராஜஸ்தான்,   உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம்,  கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தல் முடிவுகள் அமைந்தன.
பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால், நாடு பின்னோக்கித் தள்ளப்பட்டுள்ளது. அதைசரி செய்ய வேண்டிய கடமை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உண்டு. இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது வருத்தமளிக்கிறது. அங்கு, மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு உள்ளது. எனினும், அங்குள்ள அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது தெரியவில்லை. ஆனால், அங்கு ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்றார் முதல்வர் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com