வங்கி, ஏ.டி.எம்.களில் மீண்டும் கூட்டம்! மக்கள் அவதி

விழுப்புரத்தில் வங்கி மற்றும் ஏ.டி.எம்.மையங்களில் பணம் பெறுவதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் வங்கி மற்றும் ஏ.டி.எம்.மையங்களில் பணம் பெறுவதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
 மத்திய அரசு 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதென்று அறிவித்த தினத்திலிருந்து, ஒருமாத காலமாக மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் வங்கிகள், ஏ.டி.எம். மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து அவதிப்பட்டு வருகின்றனர். இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், வங்கிகள் மூடப்பட்டன. இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் மறைவு உள்ளிட்ட காரணங்களால், கடந்த 3 நாள்களாக பணப்பரிமாற்றத்திற்கு வழியின்றி, ஏ.டி.எம். மையங்களும் செயல்படாமல் போயின. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் புதன்கிழமை மீண்டும் வங்கிகளில் கூட்டம் அதிகரித்தது. தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளிலும், அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் சம்பளப் பணத்தைப் பெற நீண்ட வரிசையில் காத்திருந்தனர். எனினும் அவர்களுக்கு முழு தொகையும் (வாரத்துக்கு ரூ. 24 ஆயிரம்) வழங்கப்படவில்லை.
 ஏ.டி.எம். மையங்களில் காலை 10 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தை எடுத்துச் சென்றனர். அதனால், பல ஏ.டி.எம்.களில் ஒரு மணி நேரத்திலேயே பணம் காலியானது. இதனால் பலர் ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றனர்.
 விழுப்புரத்தில் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட ஏ.டி.எம்.களில் நீண்ட வரிசை காணப்பட்டது. அனைத்து ஏ.டி.எம்.களிலும் பெரும்பாலும் 2,000 ரூபாய் நோட்டுகளே வந்தன. இதனால், சில்லறைக்கு தட்டுப்பாடு நிலவியது.
 பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களில் ஒருமுறை மட்டுமே பணம் நிரப்பப்படுவதால், வாடிக்கையாளர்கள் காத்திருந்து ஏமாற்றமடைந்தனர். எனவே, பகல் நேரங்களில் மட்டுமாவது, தொடர்ந்து பணத்தை நிரப்பி, கூட்ட நெரிசலையும், பணத் தட்டுப்பாட்டையும் போக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com