புதுவையில் இருந்து மது பாட்டில்களை காரில் கடத்தி வந்த இளைஞர் கைது

புதுவையில் இருந்து சொகுசு காரில் பணத்துடன் மது பாட்டில்களை கடத்தி வந்த இளைஞரை விழுப்புரம் அருகே போலீஸார் சனிக்கிழமை மடக்கிப் பிடித்தனர்.

புதுவையில் இருந்து சொகுசு காரில் பணத்துடன் மது பாட்டில்களை கடத்தி வந்த இளைஞரை விழுப்புரம் அருகே போலீஸார் சனிக்கிழமை மடக்கிப் பிடித்தனர்.
விழுப்புரம் அருகே உள்ள பனையபுரம் சோதனைச் சாவடியில், காவல் உதவி ஆய்வாளர் குமணன் தலைமையிலான போலீஸார், சனிக்கிழமை காலை 7 மணிக்கு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, புதுவை-திருக்கனூரில் இருந்து வந்த சொகுசு காரை நிறுத்த முயன்றபோது, காரில் வந்தவர்கள், காரை திருப்பிக்கொண்டு வந்த வழியிலேயே திரும்பிச் சென்றனர். இதனையடுத்து, போலீஸார் பின் தொடர்ந்து விரட்டிச் சென்றனர். திருக்கனூர் சாலையில் சென்ற அவர்கள், இடையே வெட்டுக்காடு கிராமச் சாலையில் திரும்பி அதிவேகமாக சென்றனர். அப்போது, கிராமத்தில் வந்தவர்கள் மீது கார் உரசியதால் மக்கள் திரண்டனர்.
இதனயைடுத்து, கணபதிப்பட்டு கிராமத்தில் பொதுமக்கள் உதவியுடன் போலீஸார் காரை மடக்கிப் பிடித்தனர். அப்போது, காரில் வந்த இருவரில் ஒருவர் தப்பியோடிவிட்டார். மற்றொருவர் சிக்கினார்.
காரில் சோதனையிட்டபோது, புதுவையிலிருந்து பீர், பிராந்தி உள்ளிட்ட 450 மதுபாட்டில்கள் மூட்டைகளில் வைத்து கடத்திச் சென்றதும், அதில், ரூ.ஒரு லட்சம் பணத்தையும் மறைத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது.
பிடிபட்டவரிடம் விசாரித்தபோது, அவர், சென்னை கே.கே.நகர் பகுதி அம்பாள் நகர் பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த ரகு (21) என்பதும், புதுவையிலிருந்து, சென்னைக்கு மது பாட்டில்கள் கடத்திச் சென்றதும், காரில் வந்து தப்பியவர், சென்னையைச் சேர்ந்த மணி என்பதும், அவரது கடையில் வைத்து, விற்பனை செய்ய மதுபாட்டில்கள் கடத்திச் சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து, பிடிபட்ட கார், மதுபாட்டில்கள் பணத்துடன், விழுப்புரம் மதுவிலக்கு காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, காவல் துணைக் கண்காணிப்பாளர் வெள்ளைச்சாமி, ஆய்வாளர் மூர்த்தி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நரேந்திரன் நாயர் விசாரித்தார்.
தொடர்ந்து, ரூ.1.50 லட்சம் மதுபாட்டில்கள், ரூ.4 லட்சம் கார், ரூ.ஒரு லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸார், ரகுவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com