போலி குடும்ப அட்டைகளை வழங்கி முறைகேடு: ஆட்சியரகத்தில் கிராம மக்கள் புகார்

கண்டாச்சிபுரம் அருகே போலி குடும்ப அட்டைகளை வழங்கி முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை புகார் தெரிவித்தனர்.

கண்டாச்சிபுரம் அருகே போலி குடும்ப அட்டைகளை வழங்கி முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை புகார் தெரிவித்தனர்.
 இது குறித்து, பாதிக்கப்பட்ட வெள்ளம்புத்தூர் கிராம மக்கள் முன்னாள் ஊராட்சித் தலைவர் நடேசன் தலைமையில், விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் வந்து புகார் மனு அளித்தனர். அவர்கள் கூறியதாவது:
 கண்டாச்சிபுரம் வட்டம், வெள்ளம்புத்தூர் கிராமத்தில் உள்ள வீராசாமி, அவ்வூர் நியாயவிலைக் கடை விற்பனையாளர் சங்கர் ஆகியோர் சேர்ந்து கொண்டு, கிராமத்தில் விடுபட்ட பலருக்கு புதிய குடும்ப அட்டைகள் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3ஆயிரம் வரை வசூலித்துக்கொண்டு, ஏற்கெனவே பொது விநியோகத் துறையால் தடை செய்யப்பட்ட போலி குடும்ப அட்டைகளை வழங்கியுள்ளனர்.
 அவர்கள், பழைய குடும்ப அட்டைகளில் பெயர்களைத் திருத்தம் செய்து, குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை முறைகேடாக இணைத்து எழுதியும், இணையம் மூலமாகவும் பதிவேற்றம் செய்து, பலருக்கு முறைகேடாக குடும்ப அட்டைகளை வழங்கியுள்ளனர்.
 பணம் பெற்ற மக்களிடம், புதிய அட்டை வந்துவிட்டதாகக் கூறி, பழைய குடும்ப அட்டையினையும், சிலருக்கு குடும் அட்டை நகலையும் இணைத்து அதில் பெயர் திருத்தம் செய்து வழங்கியுள்ளனர்.
 இந்த வகையில், கணேசன் மனைவி ராணி, முனுசாமி மகன் சீனு, செல்வம் மனைவி ரஞ்சிதா, முத்துசாமி மகன் ராஜேந்திரன், கலியபெருமாள் மகன் ராமதாஸ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட, புதிய அட்டைக்காக விண்ணப்பித்து விடுபட்ட குடும்பத்தினரிடம், புதிய குடும்ப அட்டை பெற்றுத் தருவதாக பணம் வசூலித்துக்கொண்டு அவர்கள் முறைகேடு செய்துள்ளனர்.
 இதற்கு கண்டாச்சிபுரம் வட்ட வழங்கல் அலுவலக கணினிப் பதிவாளரும் உடந்தையாக இருந்திருக்கிறார்.
 இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இவர்களது புகார் மனுவைப் பெற்ற அதிகாரிகள், வழங்கல் துறை மூலம் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com