பேருந்து வசதி கோரி கிராம மக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

திண்டிவனம் அருகேயுள்ள பிரம்மதேசத்திலிருந்து பேருந்து வசதி கோரி, 8 கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டிவனம் அருகேயுள்ள பிரம்மதேசத்திலிருந்து பேருந்து வசதி கோரி, 8 கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்-மரக்காணம் நெடுஞ்சாலையில் உள்ள பிரம்மதேசம், மரக்காணம் சுற்றியுள்ள கிராமங்களுக்கு, திண்டிவனத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
 இப்பேருந்துகள் பெரும்பாலும் பிரம்மதேசம் வழியாக மரக்காணம் வரை நெடுஞ்சாலையில் செல்வதால் சுற்றுப் பகுதி கிராம மக்கள், சாலையோர நிறுத்தங்களில் இறங்கி, அங்கிருந்து தங்கள் கிராமங்களுக்கு நடந்தே செல்லும் நிலை உள்ளது.
 குறிப்பாக, பிரம்மதேசத்திலிருந்து கீழ்நெமிலி வரையான 7 கி.மீ. தொலைவில் கீழ்நெமிலி, மண்டப்பெரும்பாக்கம், தென்னம்பூண்டி, குன்னாப்பாக்கம், வாண்ணாரம்பூண்டி, மடவந்தாங்கல், அரியந்தாங்கல் உள்ளிட்ட 8 கிராமங்களுக்கு நீண்டகாலமாக பேருந்து வசதி இல்லை. இதனால், அதிருப்தியடைந்த 8 கிராம மக்களும் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் திரண்டு வந்து, பிரம்மதேசத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 அப்போது அவர்கள் கூறியதாவது: கடந்த 45 ஆண்டுகளாகவே 8 கிராம மக்களும் பேருந்து வசதி இல்லை. இதனால் வேலைக்காக மக்களும், பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்களும் நடந்தும், மோட்டார் சைக்கிளிலும் சென்று வர வேண்டியுள்ளது.
 ஆறுதலாக, தற்போது ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன என்றாலும், அதில் கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. அதில் கூட்ட நெரிசலில் பிரம்மதேசத்துக்கு வந்து, பிறகு திண்டிவனம், மரக்காணம் பேருந்துகளை பிடித்துச் செல்ல வேண்டியுள்ளது. இதனால், குறித்த நேரத்துக்கு சென்றடைய முடியவில்லை. பேருந்து வசதியின்மையால், இந்த கிராமங்களுக்கு பெண், மாப்பிள்ளை கொடுக்கக் கூட தயங்கும் அவலமும் தொடர்கிறது. சாலை சேதமாக இருந்ததால் இந்த கிராமங்களுக்கு பேருந்துகளை இயக்க அதிகாரிகள் முதலில் தயங்கினர்.
 தற்போது, தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதனால், திண்டிவனத்திலிருந்து கீழ்நெமிலி வரை அரசுப் பேருந்து இயக்க வேண்டும். அதிவேக லாரி இயக்கம் காரணமாக, இந்தத் தார்ச் சாலையில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வேகத் தடைகளால் வாகன ஓட்டிகள் அவதிப்பட நேரிடுகிறது. எனவே, அந்த வேகத் தடைகளை அகற்ற வேண்டும் என்றனர்.
 தகவல் அறிந்து வந்த திண்டிவனம் டிஎஸ்பி திருமால், பிரம்மதேசம் காவல் நிலைய ஆய்வாளர் ஏழுமலை தலைமையிலான போலீஸார், வருவாய்த் துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கும், போக்குவரத்து அதிகாரிகளுக்கும் பரிந்துரைத்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையேற்று, பொது மக்கள் சாலை மறியலைக் கைவிட்டனர்.
 2 மணி நேரம் வரை நீடித்த மறியலால், அப்பகுதியில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com