விழுப்புரத்தில் ரசாயனக்கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் பறிமுதல்

விழுப்புரத்தில் ரசாயனக்கல் வைத்து பழுக்க வைத்த 200 கிலோ மாம்பழங்களை உணவுப் பாதுகாப்புத் துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.

விழுப்புரத்தில் ரசாயனக்கல் வைத்து பழுக்க வைத்த 200 கிலோ மாம்பழங்களை உணவுப் பாதுகாப்புத் துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
 விழுப்புரம் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் வரலட்சுமி தலைமையிலானக் குழுவினர் அலுவலர்கள் சங்கரலிங்கம், கதிரவன், ஜெயராஜ் உள்ளிட்டோர் திங்கள்கிழமை விழுப்புரம் மார்க்கெட் வீதியான மகாத்மா காந்தி வீதி, பாகர்ஷா வீதிகளில் உள்ள மாம்பழக் கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, மகாத்மா காந்தி வீதியில் உள்ள முருகதாஸ் என்பவரது பழக்கடையில், மாம்பழங்களை ரசாயனக் கல் துகள்கள் (கார்பைடுகல் பவுடர்) கலந்து வைத்து பழுக்க வைத்திருந்தது தெரிய வந்தது.
 இதே போல, அருகருகே இருந்த 3 பேரது கடைகளிலும் இதே போல செயற்கையாக பழுக்க வைத்து விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.
 இதனையடுத்து, 3 கடைகளிலும் இருந்த 200 கிலோ மாம்பழங்களை உணவுப் பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர். இதுதொடர்பாக முருகதாஸ் உள்ளிட்ட 3 வியாபாரிகளுக்கு, உணவுப்பொருள் தரச் சட்டத்தின்படி நோட்டீஸ் வழங்கி எச்சரித்தனர்.
 தொடர்ந்து, முக்கிய வீதிகளில் சோதனை நடத்தினர்.
 வியாபாரிகளுக்கு எச்சரிக்கை
 ரசாயனக் கல் மூலம் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்யும் பழ வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் எச்சரித்தார்.
 இது குறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாம்பழங்களை கால்சியம் கார்பைடு கல் கொண்டு செயற்கை முறையில் பழுக்க வைத்து கடைகளில் வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்.
 இது உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் கீழ் குற்றமாக கருதப்படும். அவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 பொதுமக்களுக்கு அறிவுரை
 ரசாயனக் கல் மூலம் செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழங்களை பொதுமக்கள் கண்டறிந்து தவிர்ப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளதாவது:
 கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களில், ஆங்காங்கே கல்பட்ட இடம் மட்டும் நிறம் மாறி இருக்கும். பழத்தின் ஒரு புறம் பச்சை நிறத்திலும், மறு புறம் மஞ்சள் நிறத்திலும் காணப்படும்.
 மாம்பழத்தில் வாசனை இருக்காது. இயற்கையான சுவையும் இருக்காது. புளிப்புத் தன்மையுடன், சாப்பிட்டவுடன் தொண்டை எரிச்சல் ஏற்படும். தோலின் மேற்புறத்தில் சாம்பல் நிறம் காணப்படும். பிஞ்சு, காய் நிறம் மாறி பழம் போல் காட்சியளிக்கும். மேல் தோல் சுருங்கி காணப்படும் பழத்தின் ஒரு புறத்தில் அழுகியத் தன்மை இருக்கும்.
 ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை உள்கொள்ளுவதால் குடல் புண், தொண்டை புண், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் கேன்சர் போன்ற குடல் உபாதை நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
 எனவே ரசாயன கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழங்களை வாங்குவதை தவிர்க்கவும். மாம்பழத்தை தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து கழுவிய பிறகே உண்ண வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com