குடிநீர்ப் பிரச்னை: 2 கிராம மக்கள் சாலை மறியல்

செஞ்சி அருகே குடிநீர்ப் பிரச்னையை தீர்க்கக் கோரி, 2 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செஞ்சி அருகே குடிநீர்ப் பிரச்னையை தீர்க்கக் கோரி, 2 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செஞ்சியை அடுத்த திக்காமேடு, ரெட்டிப்பாளையம் ஆகிய கிராமங்களில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் திருவண்ணாமலை - செஞ்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரெட்டிப்பாளையம் கூட்டுச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இருபுறமும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் வரிசையில் நின்றன.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற செஞ்சி ஊராட்சி ஒன்றியப் பொறியாளர் சோமசுந்தரம், சத்தியமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் அமுதா மற்றும் போலீஸார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, திக்காமேடு கிராமத்தில் கடந்த ஒன்றரை மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்றும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், செஞ்சி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் உள்ளிட்டோரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதே போன்று, ரெட்டிப்பாளையத்தில் கடந்த 10 நாள்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்றும், இங்குள்ள ஆழ்துளை கிணறுகள் வற்றிவிட்டதால் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அந்தக் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்த 2 கிராமங்களிலும் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததன்பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com