அரசே குவாரியை நடத்தியும் மணல் விலை குறையவில்லை: விற்பனை ஒழுங்குபடுத்தப்படுமா?

தமிழக அரசே மணல் குவாரியை ஏற்று நடத்தியும், மணல் விலை குறையவில்லை. மணல் விற்பனையை ஒழுங்குபடுத்தினால் மட்டுமே அரசு மற்றும் மக்களின் எதிர்பார்ப்புக்கேற்ப விலை குறையும் நிலை உள்ளது.
அரசே குவாரியை நடத்தியும் மணல் விலை குறையவில்லை: விற்பனை ஒழுங்குபடுத்தப்படுமா?

தமிழக அரசே மணல் குவாரியை ஏற்று நடத்தியும், மணல் விலை குறையவில்லை. மணல் விற்பனையை ஒழுங்குபடுத்தினால் மட்டுமே அரசு மற்றும் மக்களின் எதிர்பார்ப்புக்கேற்ப விலை குறையும் நிலை உள்ளது.

தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்கு தினமும் 10 ஆயிரம் லாரி லோடு மணல் தேவை உள்ளது. இதில், சென்னைக்கு மட்டும் 6 ஆயிரம் லாரி லோடு மணல் தேவை.

இதனை பூர்த்தி செய்ய விழுப்புரம், திருச்சி மாவட்டங்கள் உள்ளிட்ட 9 இடங்களில் ஆறுகளில் குவாரி அமைத்து, தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் நீண்டகாலமாக மணல் விற்பனை நடைபெற்று வந்தது. இதன் காரணமாக உள் மாவட்டங்களில் ஒரு லோடு லாரி மணல் ரூ.10 ஆயிரம் வரையும், சென்னையில் ரூ.16 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், புதுவை பகுதிகளின் மணல் தேவையை விழுப்புரம் மாவட்ட மணல் குவாரியே பூர்த்தி செய்து வருகிறது.

இதனிடையே, தேவையை சாதகமாகப் பயன்படுத்தி விதிகளை மீறி கூடுதல் இயந்திரங்களைக் கொண்டு தென்பெண்ணை ஆற்றில் 50 கி.மீ. தொலைவுக்கு 30 அடி ஆழம் வரை மணல் சுரண்டப்பட்டது. இதனால் சுற்றுப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு குறைந்து, விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டதாக புகார்களும் எழுந்தன. பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

மேலும், தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர் ஆற்று மணலை வெளியே கொட்டி வைத்து, பல மடங்கு கட்டணம் வசூலித்ததால் பெரும் பிரச்னைகள் எழுந்தன.

மீண்டும் அரசு மணல் குவாரி: இந்த நிலையில், இனி மணல் குவாரிகளை பொதுப்பணித் துறை சார்பில் அரசே ஏற்று நடத்தும் என்று தமிழக முதல்வர் கடந்த மே 5-ஆம் தேதி அறிவித்தார். இதன்படி தமிழகத்தில் 40 இடங்களில் குவாரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில், முதல் கட்டமாக விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே கோண்டூரில் தென்பெண்ணை ஆற்றில் கடந்த வாரம் மணல் குவாரி தொடங்கப்பட்டது. ஒரு யூனிட் மணலுக்கு வரி, ஏற்றுக் கூலியுடன் சேர்த்து ரூ.525 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

பொதுப்பணித் துறையினர் கட்டுப்பாட்டில், இரண்டு இயந்திரங்கள் மூலம் நேரடியாக ஆற்றிலேயே மணல் எடுத்து, லாரிகளுக்கு ஏற்றி விற்பனை தொடங்கியது. இதன் மூலம், பல மடங்கு கட்டணக் கொள்ளை தடுக்கப்பட்டது.

குவாரி ஒன்றில், தினசரி 250 லாரிகள் வரை மணல் வழங்கப்படுகிறது. விதிகள் படி காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை மணல் ஏற்றப்படுகிறது. இதனால், லாரிகளுக்கான செலவினம் குறைந்து, குறைவான விலையில் மணல் வழங்க முடியும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், தற்போதும் அதே உயர்ந்த விலைக்கு மணல் விற்கப்படுவதாக பொது மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
 ஏற்கெனவே சென்னையில் ஒரு லோடு மணல் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை விற்கப்பட்டது. பற்றாக்குறை நேரங்களில் ரூ.25 ஆயிரம் வரை உயர்ந்தது. தற்போது அரசு குறைந்த விலையில் மணல் வழங்கியபோதும், அதே ரூ.20 ஆயிரம் அளவில் விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

இது குறித்து, மணல் லாரி உரிமையாளர்கள் கூறியதாவது: அரசே குவாரியைத் தொடங்கிகுறைந்த கட்டணம் வசூலித்தாலும், விரைவாக மணல் வழங்கப்படுவதில்லை. ஒரு லோடுக்கு 7 நாள்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால், ஓட்டுநரின் கூலி தினசரி ரூ.500 மற்றும் செலவினம் அதிகமாகிறது. தவிர, உள்ளூர் ரௌடிகள், அரசியல் பிரமுகர்கள், கோயில் வசூல் என ரூ.500 முதல் ரூ.1,000 வரை லாரி உரிமையாளர்களிடம் மிரட்டி வசூலிக்கப்படுகிறது. மேலும் சுங்கச்சாவடி கட்டணமாக ரூ.1,500 என அனைத்தையும் சேர்த்து கூடுதல் விலைக்கே மணலை விற்பனை செய்ய நேரிடுகிறது. ஆகவே, குவாரியை அரசு முறையாகப் பராமரித்து, பாகுபாடின்றி மணலை விரைந்து வழங்க வேண்டும், மணல் குவாரிகளில் உள்ளூர்வாசிகள் மிரட்டி பணம் வசூலிப்பது தடுக்கப்பட வேண்டும். இடத்துக்கு தகுந்தாற்போல அரசே லாரி மணலுக்குரிய அதிகபட்ச விலையை நிர்ணயிக்க வேண்டும். பயனாளிக்கு லாரி உரிமையாளர்களே மணலை விற்பனை செய்ய வேண்டும். வெளிமாநிலங்களுக்கு மணல் கடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும்.

இந்த விவகாரங்களிலும் அரசு கவனம் செலுத்தினால், சென்னையிலேயே ரூ.15 ஆயிரத்துக்குள் ஒரு லோடு மணலை வழங்க முடியும் என்றனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com