அஞ்சலகத்தை வேறிடத்துக்கு மாற்ற கிராம மக்கள் எதிர்ப்பு

விழுப்புரம் அருகே 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் துணை அஞ்சலகத்தை, ஊழியர்களின் வசதிக்காக இடம் மாற்றம்   செய்யக்கூடாது 

விழுப்புரம் அருகே 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் துணை அஞ்சலகத்தை, ஊழியர்களின் வசதிக்காக இடம் மாற்றம்   செய்யக்கூடாது  என்று  கிராம மக்கள் சார்பில்  ஆட்சியரகம்,  அஞ்சலகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து,  மாவட்ட ஆட்சியர்,  அஞ்சலக உதவி கண்காணிப்பாளர் ஆகியோரை  சந்தித்து கண்டமானடி கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
விழுப்புரம் அருகே உள்ள கண்டமானடி கிராமத்தில் துணை தபால் நிலையம் கடந்த 70 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இதன்மூலம்  அரியலூர், சித்தாத்தூர்,  அத்தியூர், கண்டம்பாக்கம்,  ஜானகிபுரம்,  குச்சிப்பாளையம்,  கொளத்தூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனர்.   மேலும்,  அங்குள்ள கூட்டுறவு வங்கி,  அரசு மேல்நிலைப் பள்ளி,  ஆரம்ப சுகாதார நிலையம்,  கால்நடை மருத்துவமனை,  வேளாண் பண்ணை ஆகியவற்றில் பணியாற்றும் அலுவலர்களும், அங்கு வரும்  பொதுமக்களும் இந்த அஞ்சலக சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.  
அஞ்சலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் சிலர்,  அவர்கள் வந்து செல்வதற்கு வசதியாக,  விழுப்புரம் நகருக்கு அருகே உள்ள தந்தை பெரியார் நகருக்கு அஞ்சலகத்தை இடம் மாற்றம் செய்ய திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.
இதனால்,  5 கி.மீ. தொலைவுள்ள நகரப் பகுதிக்கே அஞ்சல் சேவை,  பணம் சேமிப்பு,  இதர சேமிப்புத் திட்டங்கள்,  அஞ்சலக காப்பீடு,  மின் கட்டணம் போன்றவற்றுக்குச் செல்ல கிராம மக்கள் அவதிப்பட வேண்டியிருக்கும்.  
கிராமப்புற மக்களுக்காகவே இயங்கி வந்த துணை அஞ்சலகத்தை,  தலைமை அஞ்சலகம் போன்றவை உள்ள நகரப் பகுதிக்கு மாற்றிச் செல்வது அர்த்தமின்றி போகும். அங்குள்ள மேற்கண்ட பிற அரசுத்துறை அலுவலகங்களில் இணைய சேவைகள் மூலம் பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,  இணைய சேவை சரியாக கிடைக்கவில்லை என்று தவறான தகவல் தெரிவித்து,  அஞ்சலகத்தை மாற்றிச் செல்ல முயல்கின்றனர்.   இது தொடர்பாக,  பிஎஸ்என்எல் அதிகாரிகளிடம் கேட்டபோது,  கண்டமானடி அஞ்சலக  இணையவழி சேவைக்கு அவர்கள் விண்ணப்பமே வழங்கவில்லை,  அப்படி கேட்டால் உடனே சேவை அளிக்கப்படும் என்கின்றனர். இதனால்,  ஊழியர்கள் சுயநலத்துக்காக கிராம மக்கள் பயன்படுத்தி வரும் அஞ்சலகத்தை மாற்ற முயலும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
  மனு குறித்து விசாரித்த ஆட்சியர் இல.சுப்பிரமணியன்,  அஞ்சலக கண்காணிப்பாளருக்கு பரிந்துரைத்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதேபோல,   இவர்களது மனுவைப் பெற்ற,  விழுப்புரம் அஞ்சலக உதவி கண்காணிப்பாளர் ராஜேந்திரன்,  கண்டமானடி துணை அஞ்சலகத்துக்கு இணையவழி சேவை சரியாக கிடைக்கவில்லை என்பதால்,  இடம் மாற்ற ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.  
அலுவலகத்தை மாற்றவில்லை.  அங்கேயே இணைய சேவை பெறவும் ஆய்வு செய்யப்படும்.  இது குறித்து,  அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
அவர்  மூலம் ஆய்வு செய்து,  ஒருவார காலத்துக்குள்  நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com