கந்து வட்டி கொடுமை: விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி: விழுப்புரம் ஆட்சியரகத்தில் பரபரப்பு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்துக்கு கந்து வட்டி பாதிப்பு புகார் மனுக்களுடன் வந்து குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்ற விவசாயி மற்றும் மற்றொரு பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்துக்கு கந்து வட்டி பாதிப்பு புகார் மனுக்களுடன் வந்து குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்ற விவசாயி மற்றும் மற்றொரு பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
 விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், எறையூரைச் சேர்ந்தவர் குமார்(44), விவசாயி. இவர், செவ்வாய்க்கிழமை விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள், மனைவி உமாபதி(34), பிள்ளைகள் காங்கேயன்(13), கெüசல்யா (12), கலைச்செல்வி(12) ஆகியோருடன் மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்து தீக்குளிக்க முயன்றார். அவர்களை காவல் கண்காணிப்பாளர் அலுவலக வாயில் பகுதியில் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
 அப்போது, குமார் கூறியதாவது: எறையூரைச் சேர்ந்த குவாரி உரிமையாளரான லோகநாதனிடம், கடந்த 2010-ஜூன் மாதத்தில் ரூ.50 ஆயிரம் கடன் பெற்றேன். இதற்கு ஈடாக எனது 66 சென்ட் நிலத்தின் பத்திரத்தை அடமானம் வைத்தேன். இதன்பிறகு, சிறுகச், சிறுக அவரிடம் ரூ.3.45 லட்சம் வரை கடன் வாங்கினேன்.
 லோகநாதன் எனது நிலத்தின் அருகே கல்குவாரி நடத்தி வருவதால், நிலத்தில் பயிர்கள் பாதிக்கப்பட்டு வந்தது. இதற்கு இழப்பீடு வழங்கும் விதமாக, வாங்கிய பணத்துக்கு வட்டி செலுத்த வேண்டாம் என்று தெரிவித்தார்.
 இந்த நிலையில், வாங்கிய கடனை கடந்த அக்.12-ஆம் தேதி திருப்பிச் செலுத்த முயன்றபோது, அதனை வாங்க மறுத்த லோகநாதன், வாங்கிய கடனுக்காக, உனது நிலத்தை கிரையம் செய்துகொண்டேன். உனக்கு நிலம் வேண்டுமெனில், வாங்கிய பணத்துக்கு 6 பைசா வட்டி போட்டு, ரூ.17 லட்சத்தை ஒரே தவணையில் செலுத்த வேண்டும் என்று மிரட்டினார்.
 விசாரித்தபோது, அடமானம் வைத்த பத்திரத்தை அவர், மோசடியாக பொது அதிகாரம்(பவர்) பெற்றதாக பதிவு செய்து, அதனை அவரது மனைவி சாவித்ரி பெயருக்கு கிரையம் செய்துள்ளது தெரிந்தது. கந்து வட்டி வசூலித்து, நிலத்தை மோசடி செய்த லோகநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 மற்றொரு சம்பவம்: அதே போல, கைப்பையில் மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்து, காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற செஞ்சி வட்டம் நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் மனைவி பிரேமாவையும் (50) போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
 அவரிடம் விசாரித்தபோது, செஞ்சி அருகே சிறுநாத்தூரைச் சேர்ந்த வட்டி தொழில் செய்து வரும் சுரேஷிடம், கடந்தாண்டு ஜூன் மாதத்தில், ரூ.7.5 லட்சம் கடனுக்காக, எங்களது வீட்டை அடமானம் வைத்திருந்தோம். அந்த நபர், எங்களுக்குத் தெரியாமல், வேறு நபருக்கு வீட்டை விற்பனை செய்துள்ளார். ரூ.30 லட்சம் மதிப்புள்ள வீட்டினை விற்பனை செய்து மோசடி செய்தது குறித்து, அவரிடம் கேட்டபோது, பதில் கூறாமல் மிரட்டி அனுப்பிவிட்டார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இவ்விரு தீக்குளிப்பு முயற்சி சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டது.
 இதனையடுத்து, விழுப்புரம் தாலுகா போலீஸார், குமார் குடும்பத்தினர், பிரேமா ஆகியோரை கைது செய்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். பிறகு, தொடர்புடைய காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, கைதானவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
 போலீஸார் கெடுபிடியை மீறி...: விழுப்புரம் பெருந்திட்ட வளாக வாயில் பகுதியில் மேற்கு ஆய்வாளர் காமராஜ் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டு, காலை 10 முதல் பகல் 11.30 மணி வரை கடும் சோதனைக்குப் பிறகே பொது மக்கள், வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. எனினும், போலீஸாரின் இந்த சோதனை கெடுபிடியை மீறி தீக்குளிக்க முயன்றவர்கள் பின்வாசல் வழியாக வந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com