செஞ்சி அருகே புதிய கற்கால மனிதர்கள் வாழ்விடம்!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே புதிய கற்கால மனிதர்கள் வாழ்விடத்தை, களப்பயணம் மேற்கொண்ட அரசுப் பள்ளி மாணவர்கள் கண்டறிந்துள்ளனர். புதிய கற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கருவிகளும் கண்டெடுக்கப்பட்டன.
செஞ்சி அருகே புதிய கற்கால மனிதர்கள் வாழ்விடம்!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே புதிய கற்கால மனிதர்கள் வாழ்விடத்தை, களப்பயணம் மேற்கொண்ட அரசுப் பள்ளி மாணவர்கள் கண்டறிந்துள்ளனர். புதிய கற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கருவிகளும் கண்டெடுக்கப்பட்டன.

செஞ்சி வட்டம், பென்னகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் இயங்கி வரும் தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்கள், விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சலோ இருதயசாமி ஆலோசனையின்பேரில், காந்தி ஜயந்தி அன்று (அக்.2) தொன்மைப் பாதுகாப்பு விழிப்புணர்வு களப்பயணத்தை, தொன்மை பாதுகாப்பு மன்ற விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், பென்னகர் அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியருமான நா.முனுசாமி தலைமையில் மாணவர்கள் 20 பேர் அடங்கிய குழுவினர், வரலாறு பட்டதாரி ஆசிரியர் எஸ்.சரவணன், அறிவியல் ஆசிரியர் எஸ்.தண்டபாணி உள்ளிட்டோர் மேற்கொண்டனர். இவர்கள் செஞ்சி வட்டம் சண்டிசாட்சி மலையடிவாரத்தில் நீலகண்டன் என்பவரின் விவசாய நிலத்திலும், மலையில் இருந்து வரும் நீரோடை பகுதியிலும் ஆய்வு செய்தனர்.

அப்போது, சுமார் கி.மு.3ஆயிரம் ஆண்டில் வாழ்ந்த புதிய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவி, குத்துக்கல் மற்றும் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் பயன்படுத்திய மண்ணால் செய்யப்பட்ட புகைப்பான் ஆகியவற்றைக் கண்டறிந்தனர்.

மேலும், அண்ணமங்கலம் செங்காட்டு மலையடிவாரத்தில் மாளிகை மேடு என்றழைக்கப்படும் பகுதியில் உள்ள பலராமன் விவசாய நிலத்தின் அருகே ஆய்வு மேற்கொண்டபோது புதிய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய குத்துக்கல், செல்ட் எனப்படும் சிறிய கைக் கோடாரி, வட்டக்கல், நீர் ஊற்றி வைக்கப்படும் கெண்டியின் மூக்கு பகுதி ஆகியவற்றை மாணவர்கள் கண்டெடுத்தனர். இந்த கற்கருவிகளைக் கொண்டு இந்தப் பகுதியில் வாழ்ந்த புதிய கற்கால மனிதர்கள் காய்,கனிகளை உண்டும், வேளாண்மை செய்தும் மலையின் அடிவாரத்தில் உள்ள சமதளப் பரப்பில் வாழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

செஞ்சி பகுதியில் புதிய கற்கால மனிதர்களின் வாழ்விடம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை. இதுவரை தமிழ்நாட்டின் வட பகுதிகளான சேலம், தருமபுரி மாவட்டங்களில் மட்டுமே புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடம் அமைந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ள நிலையில், செஞ்சி பகுதியிலும் அவர்கள் வாழ்ந்திருக்கலாம் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த களப்பயணத்தின்போது செஞ்சிக்கோட்டை தொல்லியல் விழிப்புணர்வு மன்ற நிறுவனர் லெனின் மாணவர்கள் கண்டெடுத்த கற்கருவிகளை புதிய கற்கால மனிதர்கள் பயன்படுத்தியதுதான் என்பதை உறுதி செய்தார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com