வியாழன்தோறும் டெங்கு தடுப்பு தின தூய்மைப் பணி: மாவட்ட ஆட்சியர்

விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு பணிக்கு 2,108 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை தோறும் டெங்கு தடுப்பு தினம் கடைப்பிடித்து பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்று

விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு பணிக்கு 2,108 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை தோறும் டெங்கு தடுப்பு தினம் கடைப்பிடித்து பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
 விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமையில் புதன்கிழமை மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 விழுப்புரம் மாவட்டத்தில் கொசுக்கள் மற்றும் நீரினால் பரவும் நோய்களை கட்டுப்படுத்த அக்.5 முதல் வியாழக்கிழமை தோறும் டெங்கு தடுப்பு தினம்
 கடைப்பிடிக்கப்படவுள்ளது.
 அன்றைய தினத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்கள், வணிக வளாகங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், தொழிற்சாலைகள், பொதுமக்கள் கூடும் இடங்கள், வீடுகளில் தேவையற்ற பொருள்களை அகற்றுதல், புதர்களை அகற்றுதல், கொசு வளரும் இடங்களைக் கண்டறிந்து அப்புறப்படுத்துதல், தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுதல், புகை மருந்து அடித்தல், நிலவேம்பு கசாயம் கொடுத்தல் பணிகள் நடைபெறும்.
 இந்தப் பணிக்காக வட்டாரம் தோறும் 30 களப்பணியாளர்களும், பேரூராட்சிகளில் தலா 10 பேரும், நகராட்சிகளில் 60 பேரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அனைத்து ஊராட்சிகளிலும் துப்புரவுப் பணி நடைபெறுகிறது. இந்த களப்பணியாளர்களுடன், தூய்மைக் காவலர்கள், துப்புரவுப் பணியாளர்கள், உள்ளாட்சி பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் இணைந்து தூய்மைப் பணியை மேற்கொள்வர்.
 அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு சிகிச்சைக்கான தனிப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காய்ச்சல் பாதித்த மக்கள் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகலாம். அரசு மருத்துவமனைக்கு காய்ச்சல் பாதித்து வருவோர் நுழைவுச் சீட்டு பெறாமல் காய்ச்சல் சிறப்பு மையத்தில் உடனடியாக அனுமதிக்கப்படுவர். 5 பேர் கொண்ட மருத்துவக் குழு சிகிச்சையளிப்பர். அரசு மருத்துவமனைகளில் கஞ்சி, நிலவேம்பு குடிநீர், உப்பு சர்க்கரை கரைசல் மற்றும் பப்பாளி இலைச்சாறு வழங்கப்படும்.
 மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்து வழங்கும் கடைகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் 2,108 பேர் டெங்கு விழிப்புணர்வில் ஈடுபட்டுள்ளனர். 66 மொபைல் குழுக்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம் செயல்படுகிறது. வாரம் தோறும் 450 மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, 1.25 லட்சம் பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மருந்துகள் தயார் நிலையில் உள்ளன. மாவட்டத்தில் டெங்கு பாதிப்பால் உயிரிழப்பு இல்லை. டெங்கு இல்லாத மாவட்டமாக விழுப்புரம் மாவட்டம் மாற்றப்படும் என்றார்.
 மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். பிரியா, முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சலோஇருதயசாமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அனுசுயாதேவி, சுகாதாரத்துறை இணை இயக்குநர் பியர்லின் மேபல் ரூபமதி, துணை இயக்குநர்கள் சவுண்டம்மாள், ஜெமினி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com