கோயில் விழா பிரச்னை: கிராம மக்கள் சாலை மறியல்

வானூர் அருகே ரங்கநாதபுரம் கிராம மக்கள் கோயில் பிரச்னையையொட்டி வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வானூர் அருகே ரங்கநாதபுரம் கிராம மக்கள் கோயில் பிரச்னையையொட்டி வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 வானூர் அருகே உள்ள ரங்கநாதபுரம் கிராமத்தில் பழைமை வாய்ந்த வர்ணமுத்து மாரியம்மன் கோயில் உள்ளது. தற்போது அறநிலையத் துறை பராமரிப்பில் உள்ள இந்தக் கோயில் நீண்ட காலமாக சீரமைக்காமல் இருந்ததால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அக்கிராம மக்கள் குழு அமைத்து நன்கொடை வசூலித்து, கோயில் புனரமைப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். பணிகள் முடிந்து, நவ.3-ஆம் தேதி கோயில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஆயத்தப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
 இந்த நிலையில், கோயில் புனரமைப்புப் பணியை மேற்கொண்ட குழு மற்றும் கிராம மக்களிடையே செலவு கணக்கு பார்ப்பதில் பிரச்னை ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால், அறநிலையத் துறையினரும் வந்து, கும்பாபிஷேகப் பணியை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
 இதனால், பிரச்னை ஏற்பட்டதால், விரக்தியடைந்த கிராம மக்கள், கோயில் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி வியாழக்கிழமை மயிலம்-வானூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
 தகவல் அறிந்து வந்த கோட்டக்குப்பம் டிஎஸ்பி இளங்கோவன், வானூர் காவல் ஆய்வாளர் திருமணி மற்றும் போலீஸார் பொதுமக்களிடம் பேசினர்.
 அறநிலையத் துறையினரிடம் தகவல் தெரிவித்து, பிரச்னையின்றி கும்பாபிஷேக விழா நடத்த ஏற்பாடு செய்யுமாறு போலீஸார் அறிவுறுத்தியதையடுத்து, பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com