விழுப்புரம் அருகே மலட்டாற்றில் புதிய மணல் குவாரி திறப்பு

விழுப்புரம் அருகே சித்தாத்தூர் மலட்டாற்றில் அரசு சார்பில் புதிய மணல் குவாரி திறக்கப்பட்டது.

விழுப்புரம் அருகே சித்தாத்தூர் மலட்டாற்றில் அரசு சார்பில் புதிய மணல் குவாரி திறக்கப்பட்டது. நிலத்தடி நீராதாரம் பாதிக்கும் என்று எதிர்ப்பு தெரிவித்து அக்கிராம மக்கள் வியாழக்கிழமை ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.
 விழுப்புரம் பிடாகம் அருகே செல்லும் தென்பெண்ணை ஆற்றிலிருந்து, சித்தாத்தூர் பகுதியிலிருந்து மலட்டாறு பிரிந்து செல்கிறது. தென்பெண்ணையில் அதிக நீர்வரத்தில்லாமல் வறண்டு போனதால், மேடான பகுதியில் உள்ள மலட்டாற்றில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீரின்றி உள்ளது. இதனால், பல இடங்களில் மலட்டாறு விவசாய ஆக்கிரமிப்பில் உள்ளது.
 லாரிகளுக்கான புதிய மணல் குவாரி: விழுப்புரம் அருகே பிடாகம் தென்பெண்ணை ஆற்றில் இரு கரைகளிலும் ஏற்கெனவே, மணல் குவாரிகள் அமைத்து மணல் சுரண்டப்பட்டு, முள்புதர்கள் முளைத்து காட்சியளிக்கிறது. இந்த நிலையில், அரசு சார்பில் சித்தாத்தூரில் அரசு மணல் குவாரி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த பழைய சாலையில் லாரிகள் சென்று மணல் ஏற்றும் வகையில், தற்போது குவாரி அமைக்கப்பட்டுள்ளது.
 சித்தாத்தூர் மலட்டாற்றில் டிராக்டர் மூலம் மணல் எடுத்து வந்து, தென்பெண்ணையாற்றில் அமைத்துள்ள குவாரியில் மணல் ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக, கடந்த ஒரு வாரமாக சாலைகள் சீர்செய்யப்பட்டு, வியாழக்கிழமை முதல் மணல் ஏற்றும் பணியை தொடங்கியுள்ளனர்.
 மாட்டு வண்டிகளுக்கும் விரைவில் மணல்: இதேபோல, சித்தாத்தூர் பகுதியில் மாட்டு வண்டிகளுக்கு மணல் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.
 விழுப்புரம் மாவட்டத்தில் நீண்ட காலத்துக்குப் பிறகு, மாட்டு வண்டிகளுக்கும் மணல் வழங்க அனுமதி கிடைத்துள்ளதால், மாட்டு வண்டித் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 குவாரி குறித்து, பொதுப்பணித்துறை பொறியாளர் சீனிவாசனிடம் கேட்டபோது:
 சித்தாத்தூர் மலட்டாறில் அரசு மணல் குவாரி தொடங்கப்பட்டு வியாழக்கிழமை முதல் லாரிகளுக்கு மணல் வழங்கப்படுகிறது. முதல் நாளில் 10 லோடு மணல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காலை 7 முதல் மாலை 6 மணி வரை குவாரி இயங்கும்.
 இணையதளம் மூலம் பதிவு செய்யும் லாரிகளுக்கு, முன்னுரிமை அடிப்படையில் மணல் வழங்கப்படும். ஒரு யூனிட் மணல் ரூ.1,150க்கு வழங்கப்படுகிறது.
 பொதுப்பணித்துறை தாற்காலிக பணியாளர்கள் 8 பேர் இதில் ஈடுபட்டுள்ளனர். மாட்டு வண்டிகளுக்கும் விரைவில் மணல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றார்.
 மணல் குவாரிக்கு எதிர்ப்பு: சித்தாத்தூர் மலட்டாறில் மணல் எடுப்பதற்கு, அக்கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகார் தெரிவித்தனர்.
 முன்னாள் ஊராட்சித் தலைவர் கிருஷ்ணன், கலிவரதன் தலைமையில் வந்த அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
 சித்தாத்தூர் மலட்டாறில் அறிவிப்பின்றி மணல் குவாரி தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அருகே உள்ள பிடாகம், பேரங்கியூர் சுற்றுப் பகுதியில் ஆற்றில் மணல் சுரண்டப்பட்டுள்ளதால், வறட்சியால், நிலத்தடி நீர் குறைந்து விவசாயம், குடிநீர் பாதித்துள்ளது.
 மீண்டும், சித்தாத்தூரில் மணல் குவாரி அமைப்பதால், மேலும் நிலத்தடி நீராதாரம்
 பாதிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தனர்.
 மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அனுசுயாதேவி, ஆட்சியரிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com