கருவூலத் துறை கணினிமயமாக்கலை டிசம்பருக்குள் முடிக்கத் திட்டம்: முதன்மைச் செயலர் தகவல்

தமிழக கருவூலத் துறை கணினி மயமாக்கல் பணியை வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக துறையின் முதன்மைச் செயலர் தென்காசி சு.ஜவஹர் தெரிவித்தார்.

தமிழக கருவூலத் துறை கணினி மயமாக்கல் பணியை வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக துறையின் முதன்மைச் செயலர் தென்காசி சு.ஜவஹர் தெரிவித்தார்.
 விழுப்புரம் மாவட்டத்தில் கருவூலத் துறை மூலம் ஒருங்கிணைந்த நிதி, மனித வள மேலாண்மைத் திட்டத்தின் கீழ் அரசுப் பணியாளர்களின் பணிப் பதிவேடுகளை கணினிமயமாக்கல் குறித்த ஆய்வுக் கூட்டம், விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கருவூலக் கணக்குத் துறை முதன்மைச்செயலர்- ஆணையர் தென்காசி.சு.ஜவஹர் ஆலோசனை வழங்கிப் பேசியதாவது:
 நிதி மேலாண்மை தொடர்பான பணிகளை திறம்பட மேற்கொள்ள மாநில அரசு, நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள தன்னியக்க கருவூலப் பட்டியல் ஏற்பளிக்கும் முறை, வலைதள சம்பளப்பட்டியல், மின்னணு வழி ஓய்வூதியம் ஆகியன இத்திட்டத்தில் சேர்க்கப்படவுள்ளன. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.288.91 கோடி அரசு நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. திட்டத்தை ஒருங்கிணைக்க ஒரு தனியார் நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்தக் கூடிய அலுவலகங்களில் உள்கட்டமைப்புப் பணிகளும், மென்பொருள் உருவாக்கும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.
 இந்தத் திட்டத்தில் அரசின் வருவாயை இணைய வழி மூலம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதால் அரசின் நிகழ் நேர வரவை உடனுக்குடன் அறிய இயலும். நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டம் எண்ம ஒப்பம் மற்றும் விரல் ரேகைப் பதிவுமுறை மூலம் உறுதிப்படுத்துவதன் மூலம் மாநிலத்தின் நிதிநிலை விவரம் உட னுக்குடன் அரசுக்குக் கிடைப்பதுடன் நிதி மற்றும் மனித வள மேலாண்மை நிர்வாகம் சிறப்பாக நடைபெற வழிவகுக்கும்.
 காலதாமதமும் முறைகேடுகளும் தவிர்க்கப்படும்.
 முதல்கட்டமாக கடந்தாண்டு நவம்பரில் சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களில் பணிப்பதிவேடு கணினி மயமாக்கல் தொடங்கப்பட்டு, ஏப்ரல்-2017 முதல் இதர மாவட்டங்களிலும் பணி விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிற டிசம்பருக்குள் இப்பணியை முடித்திட திட்டமிடப்பட்டுள்ளது. பணியாளர் தொடர்பான அரசின் ஆய்வுக்கும், திட்டமிடலுக்கும் இந்தக் கணினி ஆவணங்கள் உதவும். ஆதாரப்பூர்வமான பணி விவரங்கள் கணினியில் இருப்பதால் பணிமாற்ற முடிவுகள் தாமதமின்றி எடுக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 38 ஆயிரத்து 115 அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் கணினிமயமாக்கப்படும்.
 ஓய்வூதியர்களுக்கான சேவைகள்: தமிழகத்தில் உள்ள 7.39 லட்சம் ஓய்வூதியர்களில், 6.60 லட்சம் பேருக்கு கருவூல அலுவலகங்கள் மூலம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்தாண்டு முதல் ஜீவன் பிரமான் என்ற மத்திய அரசின் இணையதளம் மூலம் மின்னணு உயிர்வாழ் சான்று பெற்று கருவூலத்தில் பதிவு செய்து கொள்ள கூடுதல் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, கருவூலத்துக்குச் செல்லாமலேயே இ-சேவை மையங்கள் மூலமாக தங்கள் உயிர்வாழ்வுச் சான்றினை சமர்ப்பிக்கலாம். ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவை இ-சேவை மையங்கள் மூலம் விரைவில் வழங்கப்படும்.
 தற்போது, அதற்கான படிவத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களை நிறைவு செய்து கருவூலத்தில் அளிக்க வேண்டும்.
 விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2016-2017ஆம் நிதியாண்டில் அரசு ஊழியர்களுக்கான ஊதியம் ரூ.2300.20 கோடியும், ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதியம் ரூ.508.8 கோடியும், அரசு நலத் திட்டங்களுக்கான தொகை ரூ.807.5 கோடியும் மாவட்டக் கருவூலம் வழியாக வழங்கப்பட்டுள்ளது என்றார்.
 இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பிரியா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கே.ஜோஷ் தங்கையா, உதவி ஆட்சியர் டி.பிரபுசங்கர், கருவூலத் துறை கூடுதல் இயக்குநர் பி.மகாபாரதி, மண்டல இணை இயக்குநர் செ.திருஞானசம்பந்தம், மாவட்ட கருவூல அலுவலர் பா.சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com