தன்னார்வலர்களுக்கு பேரிடர் மேலாண்மைப் பயிற்சி

வடகிழக்குப் பருவ மழையையொட்டி, மீட்புப் பணி பொறுப்பாளர்களுக்கான இயற்கை பேரிடர் மேலாண்மைப் பயிற்சி விழுப்புரம், மரக்காணம் பகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்றது.

வடகிழக்குப் பருவ மழையையொட்டி, மீட்புப் பணி பொறுப்பாளர்களுக்கான இயற்கை பேரிடர் மேலாண்மைப் பயிற்சி விழுப்புரம், மரக்காணம் பகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்றது.
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், விழுப்புரம் தெய்வாணையம்மாள் மகளிர் கல்லூரி மையத்தில் வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி வட்டங்களைச் சேர்ந்த பேரிடர் மீட்புப் பணி தன்னார்வலர்களுக்கு (முதன்மை பொறுப்பாளர்கள்) இயற்கை பேரிடர் மீட்புப் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் பயிற்சியை தொடக்கி வைத்துப் பேசியதாவது: இயற்கை இடர்பாடுகளில் மக்களை காக்க உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதே இந்த பயிற்சியின் நோக்கமாகும். மக்கள் தங்களை தாங்களாக பாதுகாத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை தெரிந்துகொள்ள வேண்டும். பேரிடர் உறுப்பினர்களை சேர்த்தல் மற்றும் அவர்களுக்கு முழுமையான பயிற்சி அளிக்க வேண்டும். அப்போதுதான் இயற்கை இடர்பாடுகளை எளிதில் எதிர்கொள்ள முடியும்.
விழுப்புரம் மாவட்டத்தில் 30 கி.மீ. தூர கடல் பகுதியில் 19 கிராமங்கள் அடங்கியுள்ளன. இந்த கிராமங்களில் பேரிடர் பாதுகாப்பு மையங்கள் உள்ளன. அனைத்து மையங்களிலும் குழுக்கள் அமைத்து முதலுதவி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 24 மணி நேரமும் செயல்படும் இலவச அவசர கால தொலைபேசி எண்களை (1077, 1070) உதவிக்காக தொடர்பு கொள்ளலாம். பேரிடர் கால இடர்பாடுகளை சமாளிக்க அரசு அனைத்து உதவிகளையும் அளிக்க
தாயார் நிலையில் உள்ளது. இயற்கை இடர்பாடுகளிலிருந்து மக்கள் தங்களை, தாங்களே எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளவது என்பதை விளக்கும் வகையில் தன்னார்வலர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது என்றார்.
இதையடுத்து, மரக்காணத்தில் நடைபெற்ற தன்னார்வலர்களுக்கான பேரிடர் பயிற்சி முகாமிலும் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று பேசினார். இதில், கிராமப் பகுதிகளில் தேர்வு செய்யப்பட்டு வந்துள்ள தன்னார்வலர்களுக்கு, மழை, வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை பாதுகாப்பாக மீட்பது, முதலுதவி அளித்தல் குறித்து செயல் விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பிரியா, திண்டிவனம் உதவி ஆட்சியர் பிரபுசங்கர், நகராட்சி ஆணையர் செந்தில்வேல், விழுப்புரம் கோட்டாட்சியர் சரஸ்வதி, வட்டாட்சியர்கள் சுந்தர்ராஜன், பிரபாகரன், பார்த்திபன், தனி வட்டாட்சியர் வேல்முருகன் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com