செஞ்சி அருகே 12-ஆம் நூற்றாண்டு நடுகல் கண்டெடுப்பு 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள பென்னகர் கிராமத்தில் 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 
செஞ்சி அருகே 12-ஆம் நூற்றாண்டு நடுகல் கண்டெடுப்பு 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள பென்னகர் கிராமத்தில் 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 பென்னகர் கிராமத்தில் செஞ்சிக்கோட்டை தொல்லியல் விழிப்புணர்வு மன்ற நிறுவனர் பெ.லெனில், பள்ளிக் கல்வித் துறை தொன்மை பாதுகாப்பு மன்ற விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்னமங்கலம் நா.முனுசாமி, தொல்லியல் ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், திவ்யா கல்லூரி மாணவி பவானி, பென்னகர் அரசுப் பள்ளியின் வரலாறு ஆசிரியர் சரவணன் மற்றும் பென்னகர் ரமேஷ் ஆகியோர் தொல்லியல் கள ஆய்வில் ஈடுபட்டனர்.
 அப்போது, வீர நடுகல்லை கண்டறிந்தனர். இந்த நடுகல் 11 அல்லது 12-ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என தோன்றுகிறது. 150 செ.மீ. உயரம், 64 செ.மீ. அகலம் கொண்ட அந்த பலகைக் கல்லில் வீரமங்கையின் உருவம் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கே உரித்தான, நளினமான உடல்வாகுடன் கூடிய அந்த சிற்பம் திரிபங்க நிலையில் நின்றவாறு, தனது இடது காலை முன்புறம் நோக்கி வைத்தும், தனது இடது கையில் வில் ஒன்றை முன்னோக்கி பிடித்தவாறும், தனது வலது கையால் வில்லின் நாணில் அம்பு ஏந்தி, எதிரியை குறி வைத்து, எய்யத் தயார் நிலையில் உள்ளவாறு செதுக்கப்பட்டுள்ளது.
 வீர மங்கையின் தலைமுடி அழகிய முறையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. காதுகளை காதணி அலங்காரம் செய்கிறது. இடை ஆடை கால்கள் வரை பரவி அணி செய்கிறது. கீழே கால்களை பாதசரம் அலங்கரிக்கிறது. கால் பகுதியில் நாய் காணப்படவில்லை என்பதால் இந்த வீரமங்கை காவல் வீராங்கனை இல்லை என்றும் எதிரிகளை எதிர்த்துப் போராடுகிறார் எனவும் அறிய முடிகிறது.
 இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது: இது போன்ற நடுகல் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. வில்லேந்தி போராடுவதில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த வீர மங்கையின் நடுகல் உணர்த்துகிறது. பென்னகர் கிராம மக்கள் இந்த வீரப்பெண்ணின் நடுகல்லை "அல்லி கல்' என அழைக்கின்றனர்.
 இதனருகில் உள்ள குளத்துக்கு "அல்லி குளம்' எனவும் அழைக்கின்றனர். இந்த பெண்ணின் நினைவாகவே இந்த கிராமத்துக்கு பென்னகர் என பெயர்க் காரணம் வந்ததாகவும், இந்த கிராமத்தில் இந்த பெண்ணை வணங்கிவிட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளதும் அறியமுடிகிறது.
 வேந்தனுடைய ஆட்சிப் பரப்பில் அடங்கிய நிலம் ஊர், நாடு, கோட்டம், மண்டலம் என பிரிக்கப்பட்டு, முறையே கிழார், வேள், சிற்றரசர், மன்னர் அல்லது மாமன்னர் ஆகியோரைக் கொண்டு ஆளப்பட்டன. இவர்கள் தத்தம் நிலைக்கு தக்கவாறு தம் படைக்கு ஆள் சேர்த்தும் பயிற்சி அளித்தும் படையை ஒழுங்கமைத்தும் பேணியும் வரவேண்டும் என்பது பொறுப்பு. நிலக்கட்டுப்பாடு ஆதிக்கமே பெரும்பாலும் போருக்கு வழிகோலின. நாடு
 பிடிச் சண்டைக்கு ஆநிரைப் போர் ஓர் தொடக்கச் சடங்காக வழி வழி மரபாக மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.
 மண்ணுக்காக இடும் இந்தப் போர்களில் வீரமரணமடைந்த மறவர்களை சிறப்பித்தும் தெய்வம் எனத் தொழவும், அது பொருட்டு மாண்ட வீரரின் உறவினர்களால் அல்லது ஆண்டைகளில் அவர் நினைவில் நிறுத்தப்பட்டவை யே நினைவுக்கல் அல்லது நடுகல் ஆகும். சமய எழுச்சி காரணமாக தமிழகத்தில் சோழர் ஆட்சியில் நடுகல் வழக்கும் குன்றிவிட்டது. ஆனால், அடித்தட்டு மக்களிடம் நடுகல் ஒரு வழிபாடாக இன்றும் நிலவி வருகிறது. தமிழ்நாட்டில் கிடைத்த பெரும்பாலான நடுகல்கள் பல்லவர் காலத்தவை. இது சங்க கால நடுகல் மரபின் இடையறா தொடர்ச்சியின் விளைவே எனலாம் எனத் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com