வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள்

கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், வட்டாட்சியர் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், வட்டாட்சியர் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
 விழுப்புரம் நகரில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள், 20 ஆண்டுகளுக்கும் மேலாக நகரில் உள்ள கடைகளுக்கு, லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்களில் வரும் பொருள்களை இறக்கி வருகின்றனர். இவர்கள், சங்கம் வைத்து செயல்பட்டு வருகின்றனர்.
 இந்த நிலையில், சில கடைகளில் தனியாக சுமைத் தூக்கும் தொழிலாளர்களை நியமித்து, சரக்குகளை இறக்க முடிவு செய்தனராம். இதற்கு, வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பினரும் ஆதரவு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
 இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தங்களையே முழுமையாக சுமை தூக்கும் பணியில் ஈடுபடுத்தக் கோரியும், கூலியை உயர்த்தி வழங்கக் கோரியும் செவ்வாய்க்கிழமை விழுப்புரம் மேற்கு போலீஸில் தொழிலாளர்கள் புகார் செய்தனர். மேலும், வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பினரும் புகார் செய்தனர்.
 இதனால், இந்தப் பிரச்னை தொடர்பாக செவ்வாய்க்கிழமை மாலை விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இருப்பினும், கோரிக்கையை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை காலை முதல் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், அன்று மாலை சமாதானக் கூட்டத்தில் பங்கேற்க சுமைதூக்கும் தொழிலாளர்கள் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர், வெகுநேரம் காத்திருந்தும் கூட்டம் நடைபெறவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் திடீரென வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 அவர்களிடம் விழுப்புரம் தாலுகா போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வியாழக்கிழமை சுமை தூக்கும் தொழிலாளர்கள், வணிகர் சங்கம், தொழிலாளர்கள் நலத் துறை அதிகாரிகள் அடங்கிய முத்தரப்புக் கூட்டம் நடத்தி, பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com