எஸ்.பி. அலுவலகத்தில் விழிப்புணர்வு விடியோ திரையீடு

விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் காவல்துறை குறித்த பொதுமக்களுக்கான விழிப்புணர்வு விடியோக்களை திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் காவல்துறை குறித்த பொதுமக்களுக்கான விழிப்புணர்வு விடியோக்களை திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவு ஏற்படுவதற்கு காவல்துறை தலைமையகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி, காவல்துறைக்கான முகநூல் பக்கம் தொடங்கப்பட்டு, காவல்துறை தொடர்பான படங்கள், விடியோ காட்சிகள் பதிவிடப்படுகின்றன. இதற்காக, காவல்
 துறையில் சமூக ஊடகப் பிரிவு செயல்பட்டு வருகிறது. இதேபோல, அந்தந்த மாவட்ட காவல்துறை தலைமையகங்களிலும் பொதுமக்களிடம் காவல்துறையின் செயல்பாடுகள், கருத்துகளை கொண்டு சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
 இதன்படி, விழுப்புரம் மாவட்ட காவல் தலைமையகத்தில், காவல்துறையினரின் நன்மதிப்பை உயர்த்தும் வகையில் விடியோ காட்சிகளை திரையிட, அகண்ட திரை அமைக்கப்பட்டுள்ளது. இதில் புகார் அளிக்கவும், கோரிக்கை மனு வழங்கவும், விசாரணைக்காகவும் வந்து செல்லும் பொதுமக்கள் பார்க்கும் வகையில் விழிப்புணர்வு விடியோக்கள், காவல்துறையினரின் செயல்பாடுகள் குறித்த விடியோக்கள் திரையிடப்பட உள்ளன.
 இந்த விழிப்புணர்வு விடியோ திரையிடும் சேவையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் புதன்கிழமை மாலை தொடக்கி வைத்தார் (படம்). தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, தொழில்நுட்பப் பிரிவு காவல் ஆய்வாளர் மல்லிகார்ஜூன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
 மனு அளிக்க வரும் பொதுமக்கள், காத்திருக்கும்போது இந்த விடியோ காட்சிகளை காண ஏதுவாக, திரை முன்பாக நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
 இதில், காவல்துறை அதிகாரிகளின் பேட்டிகள், விழாக்களில் காவல்துறையினர் பங்கேற்பு, காவல்துறையின் புதிய சேவைகள், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு கருத்துகள் போன்றவை காலை முதல் மாலை வரை தொடர்ந்து திரையிடப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com