விதி மீறி இயங்கும் சுங்கச் சாவடிகளை அடித்து நொறுக்கும் போராட்டம்: தி.வேல்முருகன்

தமிழகத்தில் விதி மீறி இயங்கும் சுங்கச் சாவடிகளை அடித்து நொறுக்கும் போராட்டத்தை நடத்த உள்ளதாக தமிவக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் தெரிவித்தார்.

தமிழகத்தில் விதி மீறி இயங்கும் சுங்கச் சாவடிகளை அடித்து நொறுக்கும் போராட்டத்தை நடத்த உள்ளதாக தமிவக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் தெரிவித்தார்.
 விழுப்புரத்தில் தவாக மாவட்டப் பொறுப்பாளர்கள் அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கட்சியன் மாநில துணைப் பொதுச் செயலர் ராம.ரவிஅலெக்ஸ் தலைமை வகித்தார்.
 கட்சியின் நிறுவனர் தலைவர் தி.வேல்முருகன் பேசியதாவது:
 நாட்டில் நடைபெறும் ஊழல் போன்றவை குறித்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகளே புகார் தெரிவிக்கும் நிலைக்குச் சென்றுள்ளது. நடுநிலையில்லாத சூழல் நிலவியதை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
 பதவிக்காக நான் கட்சி நடத்தவில்லை. தமிழர்கள் பாதிக்கப்படும் போது, அவர்களுக்காக முதலில் போராட்டம் நடத்துபவனும் நான்தான். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட 9,500 பணியிடங்களில், வெளிமாநிலத்தவர்களும் தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று பணியிடங்களை தாரை வார்த்துள்ளனர். இந்த அறிவிப்பை எதிர்த்து, நாம் தான் முதலில் போராடினோம். ஹைட்ரோ கார்பன், கெயில் போன்ற திட்டங்களுக்கு, தமிழக அரசு அனுமதி வழங்கி விவசாயிகள், பொதுமக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது. இதற்கெல்லாம் நீதி கேட்டு போராடி வருகிறோம்.
 சுங்கச்சாவடிகளை எதிர்த்து தவாக மட்டுமே போராடி வருகிறது. வாகனங்கள் வாங்கும் போதே நம்மிடம் சாலை வரி வசூலிக்கப்படுகிறது. சாலை, அடிப்படை வசதிகளை வழங்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், விதிகளை மீறி சுங்கச் சாவடிகளில் கட்டண வசூல் கண்டிக்கத்தக்கது. 40 சுங்கச் சாவடிகளில் வெளி மாநிலத்தவர்கள்தான் பணியில் உள்ளனர். நெடுஞ்சாலையில் ஒரு கி.மீ. தொலைவில் மருத்துவ, குடிநீர் அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும். ஆனால், எந்தவித வசதிகளும் இல்லை. இதைத் தட்டிக் கேட்போர் சுங்கச் சாவடி ஊழியர்களால் தாக்கப்படுன்றனர். 6 ஆண்டுகளாக ஜனநாயக ரீதியில் போராடி வருகிறோம். அடுத்ததாக சுங்கச் சாவடியை அடித்து நொறுக்கும் போராட்டத்தை நடத்த உள்ளோம். 7 கோடி தமிழர்களை ஆள்வதற்கு இங்குள்ள ஒருவரே தலைவராக தேர்வு செய்யப்படுவார். தமிழர்களின் பிரச்னைக்கு ரஜினிகாந்த் ஒருமுறை கூட குரல் கொடுக்கவில்லை என்றார் அவர்.
 கட்சியிந் தலைமை நிலைய செயலர் கனல்கண்ணன், மாநில தொழிற்சங்க பொருளாளர் பன்னீர்செல்வம், பொதுச் செயலர் ஜம்புலிங்கம், மாவட்டத் தலைவர் பாலமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
 முன்னதாக, கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலர் எம்.ஆர்.குமரன் வரவேற்றார். நகர செயலர் மோகன் நன்றி கூறினார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com