லாரி மீது கல்லூரிப் பேருந்து மோதல்: மாணவர்கள் உள்பட 19 பேர் காயம்

விழுப்புரம் அருகே லாரி மீது தனியார் கல்லூரிப் பேருந்து மோதியதில் மாணவ, மாணவிகள் உள்பட 19 பேர் காயமடைந்தனர். 

விழுப்புரம் அருகே லாரி மீது தனியார் கல்லூரிப் பேருந்து மோதியதில் மாணவ, மாணவிகள் உள்பட 19 பேர் காயமடைந்தனர்.
 விழுப்புரம் மாவட்டம், மயிலம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிப் பேருந்து, செவ்வாய்க்கிழமை காலை விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 40-க்கும் மேற்பட்டோருடன் கல்லூரி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஏமப்பூரைச் சேர்ந்த விஜயகுமார் ஓட்டிச் சென்றார். விழுப்புரத்தை அடுத்த முண்டியம்பாக்கம் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கல்லூரிப் பேருந்து தாறுமாறாக ஓடி, முன்னால் சென்ற பார்சல் லாரி மீது மோதியது. இதில் பேருந்தின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது. இந்த விபத்தில் கல்லூரி ஊழியர்கள் மதுரை மாவட்டம், கொடிமங்கலத்தைச் சேர்ந்த ஈஸ்வர்(40), விழுப்புரம் மாவட்டம், ஏரலூரைச் சேர்ந்த அருள்ஜோதி (43), மாணவ, மாணவிகள் பரமசிவம் (23), விஜய் (21), பூஜா(21), விஜயலட்சுமி (20), கஸ்தூரி (19), ஆயிஷா (19) உள்பட 19 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்த தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். விக்கிரவாண்டி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com