கள்ளக்குறிச்சி அருகே வீட்டில் தீ: தாய், குழந்தை சாவு

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண், தனது 10 மாதக் குழந்தையுடன்

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண், தனது 10 மாதக் குழந்தையுடன் மர்மமான முறையில் தீயில் கருகி உயிரிழந்தார். அவர்களை காப்பாற்ற முயன்ற கணவர் காயமடைந்தார். இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 கள்ளக்குறிச்சி கிராமச் சாவடி பகுதியில் வசிப்பவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் பால்ராஜின் மகன் சரவணன். மாற்றுத் திறனாளி. இவரது மனைவி கனகா (25). கடந்த 2012ஆம் ஆண்டு திருமணமான இந்த தம்பதிக்கு 4 வயதில் கார்த்திகா என்ற மகளும், 10 மாதமே ஆன சிவச்சந்திரன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.
 இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் உள் அறையில் கனகா, குழந்தை சிவச்சந்திரனுடனும், வெளியே சரவணன் மகள் கார்த்திகாவுடனும் தூங்கிக் கொண்டிருந்தனர். சரவணின் தந்தை பால்ராஜ் வீட்டின் மேல் அறையில் தூங்கினார். இவருக்கு காது கேட்கும் திறன் குறைவு எனக் கூறப்படுகிறது.
 அதிகாலை 2 மணியளவில் கனகாவின் அறை திடீரென தீப்பற்றி எரிந்ததாகக் கூறப்படுகிறது. இதில் கனகாவும், குழந்தை சிவச்சந்திரனும் சிக்கி காயமடைந்து அலறினர். இதனைக் கேட்டு மனைவி, குழந்தையை காப்பாற்ற சரவணன் முயன்றார்.
 இதில்அவருக்கு முகத்தில் தீக்காயம் ஏற்பட்டது. அவர் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
 இதனிடையே, தகவலறிந்து விரைந்து வந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீர் பீய்ச்சியடித்து தீயை முற்றிலும் அணைத்தனர். காயமடைந்த கனகா, சிவச்சந்திரன், சரவணன் ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
 அங்கு பரிசோதித்த மருத்துவர், குழந்தை சிவச்சந்திரன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். கனகாவை தீவிர சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், புதன்கிழமை காலை 5.50 மணியளவில் அவர் உயிரிழந்தார்.
 கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் வி.கோமதி, காவல் ஆய்வாளர் த.விஜய்குமார் மற்றும் போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
 இதனிடையே கனகாவின் தாய் சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த காளிமுத்து மனைவி நாகவேணி கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
 அதில் தனது மகள், பேரன் சாவில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com