நம்பிஆரூரான் ஆலய கும்பாபிஷேக விழாவை நிறுத்த வேண்டும்: சிவாச்சாரியார்கள்

உளுந்தூர்பேட்டை அருகே ஆகம விதிகளை மீறி நடைபெற உள்ள நம்பிஆரூரான் ஆலய கும்பாபிஷேக விழாவை நிறுத்த வேண்டும் என சிவாச்சாரியார்கள் கோரிக்கை விடுத்தனர்.

உளுந்தூர்பேட்டை அருகே ஆகம விதிகளை மீறி நடைபெற உள்ள நம்பிஆரூரான் ஆலய கும்பாபிஷேக விழாவை நிறுத்த வேண்டும் என சிவாச்சாரியார்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து, தென்னிந்திய திருக்கோயில் அர்ச்சகர்கள் பரிபாலன சபையைச் சேர்ந்த மாயவரம் ஏ.வி.சுவாமிநாதன் தலைமையிலான சிவாச்சாரியார்கள் விழுப்புரத்தில்  திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:  உளுந்தூர்பேட்டை வட்டம்,  திருநாவலூர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருமடத்தை பல நூற்றாண்டுகளாக சிவாச்சாரியார்கள் பாதுகாத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். முன்னோர்களைத் தொடர்ந்து தற்போது நாங்கள் பராமரித்து வருகிறோம்.
 இந்தக் கோயிலைப் புதுப்பித்து திருப் பணிகள் செய்து தருவதாக, அந்தப் பகுதி மக்கள் உள்ளிட்ட சில அமைப்பினர் கடந்த 2013-ஆம் ஆண்டில் முன்வந்து  திருப் பணிகளை செய்தனர். மடத்தை புதுப்பித்து கோயிலாக கட்டமைத்தனர். தற்போது கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இதில் ஆகம விதிகளை மீறி அமாவாசை தினத்தில் (நவ.7-இல்) கும்பாபிஷேக விழாவை வைத்துள்ளனர். எனவே, இந்த விழாவை நிறுத்த வேண்டும். இது தொடர்பாக, நீதிமன்றத்தில் முறையிட்டும் பலனில்லை.   இது தொடர்பாக,  திங்கள்கிழமை மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளோம்.  விழாவை நிறுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை. ஆகம மந்திரம் சொல்லாமல், அமாவாசை தினத்தில் கும்பாபிஷேகம் நடத்துவது சரியல்ல. இதுதொடர்பாக,  தமிழக அரசும்,  அறநிலையத் துறையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
 இதனிடையே, கும்பாபிஷேக விழாவை அறிவித்தபடி நவ.7-ஆம் தேதி நடத்துவதற்கான ஏற்பாடுகள் திருநாவலூர் தம்பிரான் தோழர் அறக்கட்டளை, பவானி சிவனடியார் திருக்கூடம் மற்றும் ஊர் மக்கள் சார்பில் நடைபெற்று வருகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com