மயானத்தில் பிணவறை அமைப்பதை எதிர்த்து சாலை மறியல்

விழுப்புரம், கே.கே. சாலை மயானத்தில் சடலத்தை பதப்படுத்தும் அறை கட்டப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை அப்பகுதி குடியிருப்புவாசிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம், கே.கே. சாலை மயானத்தில் சடலத்தை பதப்படுத்தும் அறை கட்டப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை அப்பகுதி குடியிருப்புவாசிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் கே.கே. சாலையில் உள்ள மயானத்தில் சடலங்கள் எரியூட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையத்தின் ஒரு பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த கட்டடத்தில் சடலம் குளிரூட்டப்பட்டு பதப்படுத்தி பாதுகாப்பாக வைக்கும் அறை கட்டப்படுவதாக தகவல் பரவியது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை, அந்த கட்டுமானப் பகுதியை 40-க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் சடலம் பதப்படுத்தும் அறை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், முகத்தில் முக உறை (மாஸ்க்) அணிந்திருந்தனர்.
இந்த போராட்டம் குறித்து அப்பகுதி குடியிருப்போர் நலச் சங்கச் செயலரும், முன்னாள் நகர் மன்ற உறுப்பினருமான பருத்தி சேகர் கூறியதாவது: கே.கே. சாலை மயானத்துக்கு அருகில் கணபதி நகர், முத்தமிழ் நகர், மணி நகர், சுதாகர் நகர், எஸ்.பி.எஸ். நகர் போன்ற குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன. எரியூட்டு மையத்தால் ஏற்கெனவே இப் பகுதியில் காற்றுமாசு போன்ற பிரச்னைகள் உள்ளன. இந்த நிலையில், இங்கு பிணவறை கொண்டு வருவது, மேலும் பிரச்னைகளை ஏற்படுத்தும். அப்பகுதி வழியாகச் செல்லும் மக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தும். இது குறித்து ஏற்கெனவே மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்துள்ளோம். ஆனால், பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த பிணவறையை இங்கு அமைக்கும் முடிவை கைவிட்டு, அரசு மருத்துவக் கல்லூரியில் அமைக்க முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.
தகவல் அறிந்து, விழுப்புரம் மேற்கு காவல் ஆய்வாளர் காமராஜ், நகர காவல் ஆய்வாளர் ராபின்சன், தாலுகா காவல் ஆய்வாளர் ராஜன் உள்ளிட்ட போலீஸார் நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். 
இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால், அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com