பாலாற்றில் குப்பைக் கழிவுகளை கொட்டிய தனியார் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்: நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

பாலாற்றில் குப்பைக் கழிவுகளை கொட்டிய தனியார் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பாலாற்றில் குப்பைக் கழிவுகளை கொட்டிய தனியார் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
 காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேடு பகுதியில் பாலாற்றைக் கடப்பதற்கும், வாகனங்கள் சென்று வருவதற்கு மேம்பாலம், தரைப்பாலம் ஆகியவை உள்ளன. தரைப்பாலத்தை பெரும்பாலும் இருசக்கர வாகன ஓட்டிகளே பயன்படுத்தி வருகின்றனர். பாலாற்றுப் படுகைகளான ஓரிக்கை, மிலிடரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மணல் கடத்தல் நடைபெறுவதோடு, பாலாற்று வழித்தடங்களில் அவ்வப்போது கழிவுநீர் திறப்பது, குப்பைக் கழிவுகளை கொட்டி மாசு ஏற்படுத்துவது உள்ளிட்டவற்றையும் சமூக விரோதிகள் செய்து வருகின்றனர். இதனை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பதோடு, நகர்ப் பகுதிகளில் குப்பைகளை அகற்றுவதில் மெத்தனமாக இருந்து வருகிறது.
 இந்நிலையில், ஓரிக்கை பகுதியில் பிரபல தனியார் பள்ளியொன்று செயல்படுகிறது. இப்பள்ளியில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பள்ளி வேனில் எடுத்துக்கொண்டு செவிலிமேடு பாலாற்று தரைப்பாலம் வழியாக ஊழியர்கள் சனிக்கிழமை சென்றனர். அங்கு, அவர்கள் வாகனத்தை நிறுத்தி தங்கள் பள்ளியில் சேகரிக்கப்பட்ட குப்பைக் கழிவுகளை பாலாற்று வழித்தடத்தில் பட்டப் பகலில் கொட்டி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தினர்.
 இதைப் படம்பிடித்த சமூக ஆர்வலர்கள் தங்களது கட்செவி அஞ்சல் (வாட்ஸ்ஆப்) குழுவில் பகிர்ந்தனர். இதையடுத்து, இச்செய்தி மளமளவென பரவி வட்டாட்சியர், ஆட்சியரின் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து, ஆட்சியரின் அறிவுறுத்தலுக்கிணங்க, வட்டாட்சியர், நகராட்சி அலுவலர்களுடன் பாலாற்று தரைப்பாலத்துக்கு சென்றனர். பள்ளி நிர்வாகம் கொட்டிய குப்பைக்கழிவுகளோடு, அங்கு கொட்டப்பட்டிருந்த குப்பைகளையும் நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தி நகராட்சி வாகனத்தில் எடுத்துச் சென்றனர்.
 10 ஆயிரம் அபராதம்: இதையடுத்து, ஆட்சியரின் உத்தரவுக்கிணங்க, அந்தத் தனியார் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதேபோல், தொடர்ந்து குப்பைக்கழிவுகளை கொட்டுவோர், சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்துவோர், குப்பைக் கழிவுகளை சரிவர அகற்றாத நகராட்சி நிர்வாகம் ஆகியோர் மீதும் ஆட்சியர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com