இருளர் திருவிழா சீர்வரிசைக்காக பாத்திரக் கடைகளில் விற்பனை மும்முரம்

மாமலல்புரத்தில் மாசிமக நாளில் இருளர் சமூகத்தினரின் திருவிழா மற்றும் திருமண விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு சீர்வரிசைக்காக பாத்திரங்கள் வாங்கப்படுவது வழக்கம்

மாமலல்புரத்தில் மாசிமக நாளில் இருளர் சமூகத்தினரின் திருவிழா மற்றும் திருமண விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு சீர்வரிசைக்காக பாத்திரங்கள் வாங்கப்படுவது வழக்கம். இதனால், இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாத்திரக் கடைகளில் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
 ஆண்டுதோறும் மாசி மாத பெளர்ணமி அன்று இருளர்கள் மாசித் திருவிழாவை நடத்துவர். இதற்காக அந்த சமூகத்தினர் ஏராளமானோர் தண்டரை, மதுராந்தகம், விழுப்புரம் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து தங்கள் குடும்பத்துடன் முதல் நாளே மாமல்லபுரத்துக்கு வருவது வழக்கம். அவர்கள் கடற்கரையில் இடங்களைப் பிடித்து சேலைகள், வேட்டிகளால் குடில்களை அமைத்து, உணவுகளை சமைத்து கடல் அன்னையை வேண்டி திருவிழா கொண்டாடுவர்.
 திருவிழா நாள்களில் திருமணம் நடைபெறுவதற்காக நிச்சயம் செய்வதும், கடந்த ஆண்டு மாசித் திருவிழாவில் நிச்சயம் செய்யப்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் செய்வதும் அவர்களது வழக்கம். திருமண விருந்தும் நடைபெறும்.
 அவர்கள் சமைப்பதற்கும், சீர்வரிசை வழங்குவதற்கும் அனுமியம், எவர்சில்வர் பாத்திரங்கள், பிளாஸ்டி பொருள்கள், மரச்சாமான்கள், வாணலி, தோசைக்கல், சல்லடை, கத்தி உள்ளிட்ட சமையல் சாதனங்கள், பேன்ஸி பொருள்களை வாங்குவர். இதற்காக மாமல்லபுரம் நகரம் முழுவதும் ஓரிரு நாள்களுக்கு முன்பே இந்தப் பொருள்களை விற்கும் வியாபாரிகள் கடை விரித்து விடுவார்கள். அதன்படி, வெளியூர் வியாபாரிகள் சனிக்கிழமையே இங்கு வந்து கடை விரித்துள்ளனர்.
 திருவிழா கொண்டாடும் இருளர் சமூகத்தினர் அவர்களிடம் பொருள்களை வாங்குவர். தவிர, உள்ளூர்வாசிகளும், சுற்றுலாப் பயணிகளும் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருள்களை வாங்கிச் செல்வதால் 3,4 நாள்களுக்கு வர்த்தகம் அமோகமாக இருக்கும்.
 இருளர் திருவிழாவுக்கு முதல் நாளில் இருந்தே சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இதனால் பேருந்துக்கள் அனைத்தும் மாமல்லபுரம் நகரில் உள்ள பேருந்து நிலையத்திற்கு வராமல் புறவழிச்சாலையிலேயே நிறுத்தப்படும். பேருந்தில் வருவோர் அங்கிருந்து ஆட்டோக்கள், வேன்கள் மூலம் நகருக்குள் வரவேண்டியிருக்கும்.
 இத்திருவிழாவை இரவில் காண்பதற்காக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் மாமல்லபுரம் கடற்கரைக்கு வருவர். வித்தியாசமாக நடைபெறும் திருமண விழாவையும், திருவிழாவையும் அவர்கள் கண்டுகளிப்பர். அந்த நாளில் மாமல்லபுரம் நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.
 மேலும் விடியற்காலையில் மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில் சார்பாக கடற்கரையில் தீர்த்தவாரி நடைபெறும். ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமியை தரிசனம் செய்வர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com