ரூ.1.10 கோடி மோசடி செய்தவருக்கு 3 ஆண்டு சிறை

கணினி வன்பொருள் வணிகம் செய்வதாகக் கூறி ரூ.1.10 கோடி மோசடி செய்த நபருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம்


கணினி வன்பொருள் வணிகம் செய்வதாகக் கூறி ரூ.1.10 கோடி மோசடி செய்த நபருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை, சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் கணினி வன்பொருள் வணிகம் செய்து வருவதாகக் கூறி கோவை, அவிநாசி சாலையில் தனியார் நிறுவனம் நடத்தி வரும் குருபிரசாத் என்பவருடன் அறிமுகம் ஆகியுள்ளார். அப்போது பிரபல கணினி நிறுவனத்தில் இருந்து கணினி வன்பொருள் வாங்கி கல்லூரிகளுக்கு விற்பனை செய்வது மூலம் அதிக லாபம் கிடைக்கும் என குருபிரசாத்திடம் கூறியுள்ளார்.
இதற்கு குறிப்பிட்ட அளவு முதலீடு தேவை எனக் கூறியுள்ளார். இதனை நம்பிய குருபிரசாத் மற்றும் அவரது மனைவி வங்கிக் கணக்கு மூலம் சுரேஷ்குமாருக்கு ரூ.1.10 கோடி பணம் கொடுத்துள்ளனர். ஆனால், வங்கி மூலம் பெற்றுக் கொண்ட பணத்தையும், அதன் மூலம் கிடைத்த லாபம் ரூ. 27.5 லட்சம் ஆகியவற்றை சுரேஷ் குமார் தராமல் இருந்துள்ளார். இது தொடர்பாக குருபிரசாத் அளித்த புகாரின்பேரில் மாநகர குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
கோவை 3 ஆவது நீதித் துறை நடுவர்மன்ற நடுவர் வி.பி.வேலுசாமி முன்னிலையில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட சுரேஷ்குமாருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும், மோசடி செய்த பணத்தை மூன்று மாத காலத்துக்குள் திரும்ப வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் மேலும் 9 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதில் அரசு தரப்பில் வழக்குரைஞர் ரேவதி ஆஜராகினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com