சௌரிபாளையம் பகுதியில் சாலைகளை சீரமைக்கக் கோரி பொது மக்கள் மனு

செளரிபாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை உடனடியாகச் சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


செளரிபாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை உடனடியாகச் சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்டப் பொதுச் செயலர் வி.நந்தகோபால், நிர்வாகிகள் பாபு, ராஜி, கணேசன், நல்லதம்பி மற்றும் சௌரிபாளையம் பகுதி மக்கள் ஆகியோர் அளித்த மனு விவரம்:
செளரிபாளையம் பகுதியை இணைக்கும் பிரதான சாலைகளான பீளமேடு சாலை, புலியகுளம் சாலை, உப்பிலிபாளையம் சாலை, பேருந்து நிலையச் சாலை உள்ளிட்ட சாலைகள் பாதாள சாக்கடைத் திட்டப் பணிக்காகத் தோண்டப்பட்டன.
ஆனால், பணிகள் தொடங்கி இரண்டு ஆண்டுகளாகியும் பணிகள் காலதாமதமாக நடைபெறுவதால், அப்பகுதி முழுவதும் சேறும்சகதியுமாகவும், குண்டும்குழியுமாகவும் காட்சி அளிக்கிறது.
இதனால் சாலையைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் மாணவர்கள், தொழிலாளர்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இதனால், சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவு சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் வந்து செல்வதிலும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, இப்பகுதியில் சேதமடைந்துள்ள சாலைகளைச் சீரமைக்கவும், பேருந்துகள் செளரிபாளையம் பேருந்து நிலையம் வழியாக வந்து செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்புகளை காலி செய்ய அவகாசம் வழங்க வேண்டும்:
கோவை, சங்கனூர் பள்ளம் அருகே உள்ள வ.உ.சி. நகர், பெரியார் நகர் பகுதி மக்கள், மாணவ, மாணவிகள் அளித்துள்ள மனு விவரம்:
கோவை சங்கனூர் பள்ளம் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக வ.உ.சி. நகர், பெரியார் நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளை காலி செய்ய அறிவுறுத்தப்பட்டது. இதற்கு மாற்றாக தமிழ்நாடு குடிசை மாற்றும் வாரியம் சார்பில் கீரணத்தத்தில் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது உள்ள பகுதி அருகே அமைந்துள்ள பள்ளிகளில் எங்கள் குழந்தைகள் படித்து வருகின்றனர். இதில், பலர் 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ளனர்.
இந்நிலையில், நாங்கள் வீடுகளை காலி செய்து கீரணத்தம் பகுதிக்கு குடியேறினால் எங்கள் குழந்தைகள் பள்ளிகளுக்கு வந்து செல்ல 15 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் எங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்தக் கல்வியாண்டு முடிவடையும் வரையில் குடியிருப்புகளை காலி செய்ய அவகாசம் அளிக்க வேண்டும் என தரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி:
இதுகுறித்து, கோவை, ராம் நகரைச் சேர்ந்த சபாபதி அளித்துள்ள மனு:
சிங்கப்பூர் வேலைக்கு செல்வதற்காக கோவை, ராமநாதபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தை அணுகினேன். அவர்கள் ரூ. 1.5 லட்சம் வாங்கிக் கொண்டு சுற்றுலா விசாவில் மலேசியாவுக்கு அனுப்பிவைத்தனர். இதனால் ஒரு மாதத்தில் மீண்டும் நாடு திரும்பிவிட்டேன். எனவே, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்த அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com