கோவை அருகே அமமுக நிர்வாகி கொலை: கொலையாளி புணேவில் பிடிபட்டார்

துடியலூர் அருகே உள்ள வரப்பாளையத்தில் கடந்த 20 நாள்களுக்கு முன்பு நடந்த கொலையில் சம்பந்தப்பட்ட நபரை

துடியலூர் அருகே உள்ள வரப்பாளையத்தில் கடந்த 20 நாள்களுக்கு முன்பு நடந்த கொலையில் சம்பந்தப்பட்ட நபரை தனிப்படை போலீஸார் புணேவில் திங்கள்கிழமை கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நகரச் செயலாளராக இருந்தவர் ஜெயவேணு (36). இவர் கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி ஒரு வழக்கில் சாட்சி சொல்வதற்காக கோவைக்கு வந்து துடியலூர் அருகே வரப்பாளையத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் தனது நண்பர்களுடன் தங்கியிருந்தார். அதன் பின்பு அவர் வீடுதிரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. நீண்டநாளாக தனது கணவர் வீடு திரும்பாததன் காரணமாக சந்தேகமடைந்த அவரது மனைவி பாலதீபா இதுகுறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருந்தார். இதன்பேரில்  விசாரணை நடத்த  துடியலூர் மற்றும் தடாகம் காவல் நிலைய அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இதனடிப்படையில் விசாரணை நடத்திய துடியலூர் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் கண்ணா தலைமையிலான தனிப் படை போலீஸார் கூறியதாவது:
வழக்கில் சாட்சி சொல்வதற்காக ஜெயவேணு வரப்பாளையத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் தனது நண்பர்களான சுரேஷ், ராஜேஷ் ஆகியோருடன் தங்கியிருந்தார். நவம்பர் 1 ஆம் தேதி மூவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ராஜேஷ்,  ஜெயவேணுவை கொலை செய்துள்ளார்.  பின்னர் நண்பர்கள் இருவரும் உடலை தூக்கிச் சென்று மலையடிவாரத்தில் உள்ள ஒரு கிணற்றில் வீசிவிட்டனர். 
இந்நிலையில் பாலதீபா அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். தன்னையும் போலீஸார் விசாரிப்பார்கள் என்று பயந்த சுரேஷ் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதனால் பயந்துபோன ராஜேஷ் தப்பிச் சென்றுவிட்டார். தொடர் விசாரணையில் அவர் புணேவில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து தனிப் படை போலீஸார் அங்கு சென்று அவரைக் கைது செய்து கோவைக்கு அழைத்து வந்துள்ளனர். 
வரப்பாளையத்துக்கு புதன்கிழமை அவரை அழைத்து வந்து ஜெயவேணுவின் உடல் வீசப்பட்டதாகக் கருதப்படும் கிணற்றைத் தோண்டி உடலை மீட்க உத்தேசித்துள்ளனர். தொடர்ந்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com