காங்கிரஸ், திமுகவை போர்க்குற்ற விசாரணைக்கு உள்படுத்த வேண்டும்: எஸ்.பி.வேலுமணி

காங்கிரஸ், திமுகவை போர்க்குற்ற விசாரணைக்கு உள்படுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை

காங்கிரஸ், திமுகவை போர்க்குற்ற விசாரணைக்கு உள்படுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.
 ஈழத் தமிழர்கள் படுகொலை விவகாரத்தில் காங்கிரஸ், திமுக மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவையில் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிவானந்தா காலனியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் அமைப்புச் செயலரும், புறநகர் மாவட்டச் செயலருமான எஸ்.பி.வேலுமணி தலைமை வகித்தார். மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், வி.சி.ஆறுக்குட்டி, எட்டிமடை சண்முகம், ஓ.கே.சின்னராஜ், கஸ்தூரி வாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 இக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:
 இலங்கையில் எவராலும் வெல்ல முடியாத வீரர்களைக் கொண்ட இனமாகத் தமிழினம் கோலோச்சி வந்தது. கடந்த 2004ஆம் ஆண்டு திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மத்தியில் அமைந்தபோது இந்த நிலைமை தலைகீழானாது. ஈழத் தமிழர்களை ஒட்டுமொத்தமாக அழிக்க நினைத்த காங்கிரஸ் கட்சி இலங்கைக்குத் தேவையான ராணுவ உதவியையும், பொருளாதார உதவிகளையும் செய்தது. இதனால் நமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள் சுமார் 1.50 லட்சம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.
 மேலும் இதில், மத்தியில் அமைச்சர் பதவிக்காகவும், தமிழகத்தில் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவும் காங்கிரஸ் கட்சி, ராஜபட்ச அரசுடன் இணைந்து நடத்திய இந்த கொலைகளுக்கு திமுக துணையாக இருந்தது. கடந்த வாரம் இந்தியா வந்திருந்த முன்னாள் அதிபர் ராஜபட்சவும் இதை உறுதி செய்திருந்தார். எனவே, ஈழத் தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் நடத்திய படுகொலைகள், தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்ட சம்பவம் போன்ற மனிதாபிமானமற்ற செயல்களுக்கு உதவிய காங்கிரஸ், திமுகவினர் மீது ஐ.நா. போர்க்குற்ற விசாரணை நடத்தி, அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில், அதிமுக பேச்சாளர் நாகையன், மாநகர, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளளா  கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com