நிதி நிறுவனம் நடத்தி ரூ. 100 கோடி மோசடி:  காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டோர் மனு

ஈரோடு, கோவை மாவட்டங்களில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.100 கோடி வரை மோசடி செய்த நிறுவன உரிமையாளர்கள்

ஈரோடு, கோவை மாவட்டங்களில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.100 கோடி வரை மோசடி செய்த நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகரக் காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டோர் புதன்கிழமை புகார் மனு அளித்தனர்.
கோவை, சௌரிபாளையம் பிரிவைச் சேர்ந்த சோபியா மரியசெல்வம், சுந்தராபுரத்தைச் சேர்ந்த அஷ்ரப், காளப்பட்டியைச் சேர்ந்த ராமசாமி, ஈரோட்டைச் சேர்ந்த சரண்யா  உள்ளிட்ட 25 பேர் கோவை மாநகரக் காவல் ஆணையர் சுமித் சரணிடம் புதன்கிழமை அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளதாவது:
ஈரோட்டைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த நிதி நிறுவனத்துக்கு கோவை,  ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகளில் கிளைகள் இருந்தன. இந்த நிறுவனம் தனது விளம்பரத்தில், தங்களுக்குச் சொந்தமாக நகைக் கடை, வேளாண் பண்ணைகள் இருப்பதாகத் தெரிவித்திருந்தது. இதில் பணம் முதலீடு செய்தால் 20 சதவீத வட்டி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தனர். 
இதன்பேரில் பலரும்  ரூ. 1 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை முதலீடு செய்திருந்தனர். பணத்தைச் செலுத்தியவர்களுக்கு ஒரு சில மாதங்கள் மட்டுமே 20 சதவீத வட்டித் தொகை வழங்கப்பட்டது. இதை நம்பி எங்களது நண்பர்கள், உறவினர்கள் பலரையும் இந்நிறுவனத்தில் முதலீடு செய்யவைத்தோம். ரூ.100 கோடி வரை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளோம்.
இந்நிலையில், அந்நிறுவனம் சில மாதங்கள் கழித்து முதலீட்டுக்கு வட்டி வழங்கவில்லை. இதுகுறித்து விசாரிப்பதற்காக நிறுவனத்துக்குச் சென்றபோது நிறுவனத்தின் தலைமையகமும், கிளை அலுவலகங்களும் மூடப்பட்டிருந்தன. இதன் தலைவர் குறிஞ்சி, கட்செவி அஞ்சல் மூலம் ஒலித்தகவல் ஒன்றை அனுப்பியிருந்தார். இதில், மேலும் 7 மாதங்கள் அவகாசம் கோரியிருந்தார். இருப்பினும், குறிப்பிட்ட கால அவகாசத்தில் எங்களது பணத்தை திரும்பத் தரவில்லை.
இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோரிடம் மனு செய்தோம். இதேபோல இந்த நிறுவனத்தின் கோவை கிளையிலும் மோசடி நடந்துள்ளதால் கோவை போலீஸாரிடமும் புகார் செய்தோம். இருப்பினும் நடவடிக்கை இல்லை. எனவே, அந்நிறுவனத்தின் சொத்துகளை முடக்கி எங்களது பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com