தொண்டாமுத்தூரில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிய துணை மின்நிலையம் திறப்பு

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் ரூ. 6 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய துணை மின்நிலையத்தை


கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் ரூ. 6 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய துணை மின்நிலையத்தை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சனிக்கிழமை திறந்து வைத்தார்.
தொண்டாமுத்தூரில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் ரூ. 6 கோடி செலவில் புதிய மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தலைமை வகித்தார்.
இதில், துணை மின்நிலையத்தைத் திறந்து வைத்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:
தமிழக அரசு தேவைக்கு ஏற்ப புதிய தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையங்களை அமைத்து வருகிறது. தொண்டாமுத்தூர் பகுதிக்கு மாதம்பட்டி துணை மின்நிலையத்தில் இருந்து இரண்டு 11 கிலோவாட் மின் பாதைகளின் மூலமாகவும், தேவராயபுரம் துணை மின்நிலையத்தில் இருந்து இரண்டு 11 கிலோவாட் பாதைகள் மூலமாகவும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மாதம்பட்டி, தேவராயபுரம் துணை மின்நிலையங்களில் மின் அழுத்தம் அதிகரித்து வருவதாலும், தொண்டாமுத்தூர் பகுதியில் மின் தேவை அதிகரித்து வருவதாலும், மின் இழப்பு, மின் அழுத்தக் குறைபாடுகளைச் சரி செய்யும் நோக்கில் தொண்டாமுத்தூரில் புதிய துணை மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
கோவை மின் பகிர்மான வடக்கு வட்டத்துக்கு உள்பட்ட தொண்டாமுத்தூர், தாளியூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 24,500 பேர் வசித்து வருகின்றனர். இங்கு 13 ஆயிரம் மின் இணைப்புகள் அளிக்கப்பட்டு மின் நுகர்வோர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த மின் நிலையத்தின் மூலம் தொண்டாமுத்தூர், தாளியூர் பகுதிகளுக்குள்பட்ட கெம்பனூர், முத்திபாளையம், குளத்துப்பாளையம், தீனம்பாளையம், புதுப்பாளையம், கலிக்கநாயக்கன்பாளையம், பூச்சியூர், சுண்டப்பாளையம் போன்ற கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு சீரான அழுத்தத்தில் மின்சாரம் வழங்க முடியும்.
இந்தத் துணை மின் நிலையம் அமைக்க ரூ.3.50 கோடியும், 5 புதிய மின் பாதைகள் அமைக்க ரூ. 24.20 லட்சமும், ஏற்கெனவே உள்ள 11 கிலோ வாட் மின் பாதையை மேம்படுத்த ரூ.73.61 லட்சமும், மாதம்பட்டி துணை மின்நிலையத்தில் மின் மாற்றி அமைத்தல், அது தொடர்பான பணிகளுக்கு ரூ.1.73 கோடியும், மாதம்பட்டி துணை மின்நிலையத்தில் இருந்து தொண்டாமுத்தூர் புதிய துணை மின் நிலையத்திற்கு 33 கிலோ வோல்ட் புதிய மின் பாதை அமைக்க ரூ.29.19 லட்சமும் என மொத்தம் ரூ. 6 கோடி செலவிடப்பட்டு இந்தத் திட்டம் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தத் திட்டப் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி தொடங்கப்பட்டன. மேலும், இந்தப் பகுதியில் புதிய துணை மின்நிலையம் அமைப்பதால் ஆண்டுக்கு சுமார் 31.56 லட்சம் யூனிட்டுகள் மின் இழப்பை குறைக்க முடியும். இதன் மூலம் தமிழ்நாடு மின் வாரியத்திற்கு தோராயமாக ஆண்டுக்கு ரூ.1.95 கோடி வரை மீதமாகும்.
மேலும், இப்பகுதிகளில் எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு தாளியூர் பகுதியில் ரூ.4.63 கோடி மதிப்பிலும், தென்கரை பகுதியில் ரூ.3.36 கோடி மதிப்பிலும், தொண்டாமுத்தூர் பகுதியில் ரூ.5.92 கோடி மதிப்பிலும், ஆலாந்துறை பகுதியில் ரூ.3.11 கோடி மதிப்பிலும், பூலுவப்பட்டி பகுதியில் ரூ.3.16 கோடி மதிப்பிலும் என 5 மின்சார மேம்பாட்டுப் பணிகள் ரூ. 20.78 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ரூபன் சங்கர்ராஜ், மின்சார வாரிய தலைமைப் பொறியாளர் மணி, மேற்பார்வைப் பொறியாளர்கள் கலைச்செல்வி, சாந்தினி, கோட்டாட்சியர் தனலிங்கம், உதவி இயக்குநர்கள் (பேரூராட்சிகள்) மனோரஞ்சிதம், (ஊராட்சிகள்) பத்மாவதி, வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், செயற்பொறியாளர் சந்திரசேகர் உள்ளிட்ட பல அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com