கூட்டுறவு சங்க செயலாளரை  கடத்தி ரூ. 50 லட்சம் பறிப்பு: 3 பேர் கைது

கோவையில் கூட்டுறவு சங்க செயலாளரை காரில் கடத்தி ரூ. 50 லட்சம் பணம் பறித்ததாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோவையில் கூட்டுறவு சங்க செயலாளரை காரில் கடத்தி ரூ. 50 லட்சம் பணம் பறித்ததாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
 கோவை, ரத்தினபுரி,  ஜி.வி.ஜி. வீதியைச் சேர்ந்தவர் சரவணகுமார் (51). இவர் வேலாண்டிபாளையம் கூட்டுறவு சங்கத்தில் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். 
இந்நிலையில் சாய்பாபா காலனி போலீஸாரிடம் அவர் அளித்த புகார் மனு விவரம்:
 வேலாண்டிபாளையம் கூட்டுறவு சங்கத்தில் வீரகேரளத்தைச் சேர்ந்த பத்மநாபன் என்பவர் அடிக்கடி நகையை அடமானம் வைத்து பணம் பெற்றுவந்தார். அப்போது, அவருடன்  எனக்குப் பழக்கம் ஏற்பட்டது.  அவ்வப்போது, அவருக்குப் பணம் கடன் கொடுத்து வந்தேன்.  ஆனால், பணத்தை சரியாக திரும்பத் தராததால் அவருக்கு செய்து வந்த உதவியை நிறுத்திவிட்டேன்.
 இதனால் ஆத்திரமடைந்த பத்மநாபன், கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (43), ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சேர்ந்த விஷ்ணுகுமார், கார்த்திகேயன், ஐயப்பன், பாலன் ஆகியோருடன் சேர்ந்து என்னைக் காரில் கடத்தி ரூ. 25 லட்சம் பணம் பறித்தனர். 
மேலும் என்னை நிர்வாணமாக்கி, ஒரு பெண்ணுடன் சேர்த்து புகைப்படம் எடுத்தனர். அந்தப் புகைப்படத்தை வைத்து மேலும் ரூ. 25 லட்சம் பணம் கேட்டு மிரட்டினர். பணம் தரவில்லை என்றால் புகைப்படத்தை வெளியிடுவோம் என மிரட்டியதால் பல்வேறு தவணையாக ரூ. 25 லட்சம் பணம் கொடுத்தேன். 
 மீண்டும் அந்தப் புகைப்படத்தை காட்டி பணம் கேட்டு மிரட்டினர். அந்தப் புகைப்படத்தில் உள்ள பெண்ணுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இந்நிலையில்,  கருணாநிதி நகர் அருகே ஜனவரி 18 ஆம் தேதி சென்று கொண்டிருந்த போது என்னை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டினர். 
எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்து இருந்தார். 
 இதையடுத்து, போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து பத்மநாபன், நாகராஜ், விஷ்ணுகுமார் ஆகியோரை கைது செய்தனர். இதில் பாலன் என்பவர் உடல்நலக் குறைவால் இறந்து விட்டார். மேலும் தலைமறைவாக உள்ள கார்த்திகேயன், ஐயப்பன் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com