மருதமலையில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா திங்கள்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா திங்கள்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூசத் திருவிழா கடந்த 14 ஆம் தேதி விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து 15 ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. இதையடுத்து தினசரி காலை, மாலை வேளைகளில் யாக சாலை, ஹோமம், சுவாமி உலா ஆகியன நடைபெற்று வந்தன. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பகலில் இந்திர விமானத்திலும், மாலையில் தங்க மயில் வாகனத்திலும் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
தைப்பூசத் திருநாளான திங்கள்கிழமை அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து யாகசாலை பூஜை, மூலவருக்கு மஹா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் காலை 9 மணிக்குத் தொடங்கியது. முன்னதாக, விநாயகர் பூஜை, கங்கணம் கட்டுதல், கலச பூஜை, ஹோமம், பட்டுவஸ்திரம் சாத்துதல், தாரை வார்த்துக் கொடுத்தல், 21 திரவியங்களால் அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன.
அத்துடன், மணமேடையின் முன்பு ஹோம குண்டம் வளர்க்கப்பட்டு சிவாச்சாரியார்களால் வேத மந்திரம் ஓதப்பட்டு அக்னி ஹோமம் வளர்க்கப்பட்டது. பின்னர், முருகன், வள்ளி திருமண வைபவம் நடைபெற்றது. பச்சைப் பட்டு உடுத்தி வள்ளியும், சிவப்புப் பட்டு உடுத்தி தெய்வானையும் எழுந்தருள வேத மந்திரங்கள் முழங்க சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் நடந்தேறியது. இதைத் தொடர்ந்து பக்தர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு மொய் எழுதினர். இதில், ரூ.70,060 மொய் வசூலானது.
இதையடுத்து மகா தீபாராதனை நடைபெற்றது. திருமண வைபவத்துக்குப் பிறகு முருகன், வள்ளி, தெய்வானை சமேதரராய் வெள்ளை யானை வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதைத் தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர் மேனகா, முன்னாள் அறங்காவலர் சி.ஆர்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள், அதிகாரிகள், பக்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
தைப்பூசத்தையொட்டி, கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் பாத யாத்திரையாகவும், வாகனங்களிலும் குவியத் தொடங்கினர். அதேபோல் திங்கள்கிழமை காலை நூற்றுக்கணக்கானவர்கள் காவடி ஏந்தியும், அலகு குத்தியும் நேர்த்திக் கடன் செலுத்தினர். விழாவையொட்டி அடிவாரத்தில் இருந்து கோயிலுக்குச் செல்வதற்கு கூடுதல் பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
 பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததை அடுத்து மாவட்டக் காவல் துறை சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அதேபோல் பக்தர்களின் வசதிக்காக காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து மருதமலைக்கு கோவை கோட்ட போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்து வசதி செய்யப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து மருதமலையில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு பொன்னூஞ்சல் நிகழ்ச்சியும், வேடர்பறி லீலை குதிரை வாகனத்தில் திருவீதி உலாவும், வியாழக்கிழமை வசந்த உற்சவமும் நடைபெற உள்ளன.
 

குருந்தமலை, குமரன்குன்று முருகன் கோயில்களில்...

மேட்டுப்பாளையம் அருகே உள்ள  குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோயில், குமரன்குன்று கல்யாண சுப்பிரமணியர்  கோயில்களில் தைப்பூசத் தேர்த் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றன. 
விழாவையொட்டி திங்கள்கிழமை காலை 7 மணியளவில்  வள்ளி, தெய்வானையுடன் குழந்தை வேலாயுதசுவாமி  திருத்தேருக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலை 4. 30 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. 
மேட்டுப்பாளையம் அருகே குமரன்குன்று கல்யாணசுப்பிரமணி சுவாமி கோயிலில் தைப்பூசத் தேர்த் திருவிழாவையொட்டி தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலை 5 மணிக்கு கல்யாண சுப்பிரமணியருக்கு வள்ளி தொய்வானையுடன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து 7 மணிக்கு திருக்கல்யாண கோலத்தில் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுதசுவாமி கோயிலில்...
தைப்பூசத்தையொட்டி சூலூர் அருகே செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுதசுவாமி கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை  நடைபெற்றது. 
சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர். கனகராஜ் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கிவைத்தார். இதைத் தொடர்ந்து,  திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு விநாயகர் தேரும், அதனை அடுத்து மந்திரகிரி வேலாயுத சுவாமி தேரும் ஊர்வலமாக பக்தர்களால் வடம்பிடித்து இழுத்து வரப்பட்டது.  
முன்னதாக செஞ்சேரிமலை பொதுமக்கள் சார்பாக வாழை மரங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு தேர்களை அலங்கரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
விழாவில்,  ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் முத்துமாணிக்கம், கருமத்தம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கர், சூலூர் காவல் ஆய்வாளர் தங்கராஜ் உள்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com