பகல் நேர குழந்தைகள் பாதுகாப்பு மையங்களுக்கு உணவு நிதி ஒதுக்கீடு செய்யக் கோரிக்கை

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பகல் நேர பாதுகாப்பு மையங்களில் உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகளின் மதிய உணவுக்கு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பகல் நேர பாதுகாப்பு மையங்களில் உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகளின் மதிய உணவுக்கு தமிழக அரசு  நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்கீழ் மாற்றுத் திறனுடையோருக்கான உள்ளடங்கிய கல்வித் திட்டத்தின் கீழ் தலா ரூ. 3 லட்சம் செலவில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான பகல் நேர பராமரிப்பு மையங்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களிலும் இயங்கி வருகின்றன. இம்மையங்களில் பள்ளி செல்லா மாற்றுத் திறனாளி குழந்தைகளின் நலனுக்காக ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு இயன்முறை (பிஸியோ) மருத்துவப் பயிற்சிக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த மையங்களுக்கு மாற்றுத் திறனாளி குழந்தைகள் வந்து செல்ல ஆட்டோ வசதி உள்ளது. மேலும், அவர்களுக்கு 2 வேளைகளுக்கு  பால், ரொட்டி, தானிய வகைகள் வழங்கப்படுவதுடன், மதிய நேர உணவும் வழங்கப்பட்டு வந்தது. 
இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக மதிய உணவுக்கான நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்யாததால்  தனியாரை அணுகி நன்கொடை பெற்று , குழந்தைகளுக்கு உணவு வழங்கி வருகின்றனர். ஆனால், எதிர்பாராத விதமாக சில நேரங்களில் நன்கொடையாளர்களின் உதவி கிடைக்காதபோது  குழந்தைகளுக்கு உணவு அளிப்பதில் சிக்கல் எழுகிறது.
இதுகுறித்து, கல்வித் துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிப்பதாவது:
தமிழகம் முழுவதும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பகல் நேர பாதுகாப்பு மையங்கள் செயல்படுகின்றன. ஈரோடு மாவட்டத்தில் 14 ஒன்றியங்களிலும் இந்த மையங்கள் இயங்கி வருகின்றன. இது தவிர, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 6 மையங்களும் ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. மையங்களில் படிக்கும் குழந்தைகளுக்கு கடந்த காலங்களில் உணவுக்காக ரூ. 5 ஆயிரம்  ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க முடியாத நிலை உள்ளது. தனியார் நன்கொடையாளர்கள் மூலம் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. ஆனால், அரசு நிதி ஒதுக்கீடு செய்தால் மட்டுமே  குழந்தைகளுக்கு தொய்வின்றி உணவு வழங்க முடியும் என்றனர்.
பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் நீடித்து வரும் இப்பிரச்னைக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தனி கவனம் செலுத்தி நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com