ஈரோடு நகரில் தொடரும் வழிப்பறிச் சம்பவங்கள்": நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

ஈரோடு மாநகரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும்  வழிப்பறி, திருட்டு சம்பவங்களைக்

ஈரோடு மாநகரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும்  வழிப்பறி, திருட்டு சம்பவங்களைக் கட்டுப்படுத்த  மாவட்ட காவல் துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு, வீரப்பன்சத்திரம் பகுதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்த பாலசுப்பிரமணி என்பவரின் மனைவி நிலா என்பவரிடம் போலீஸாக க நடித்து 7 பவுன் தாலிச் சங்கிலியை திருடிச் சென்றனர். ஈரோடு, பூந்துறை சாலை வாய்க்கால்மேடு பகுதியில் ஒரு மளிகைக் கடையின் மேற்கூரையைப் பிரித்து கடையின் உள்ளே புகுந்து பணம், கணினியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். வெண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த பால்காரர் ஒருவரிடம் வழிப்பறி திருடர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி இருசக்கர வாகனத்தையும், பணத்தையும் திருடியுள்ளனர். ஈரோடு அருகே திண்டல், குமலன்குட்டை பேருந்து நிறுத்தம் பகுதியில் சென்ற 2 பெண்களிடம் இருசக்கர வாகனத்தில் சென்ற மர்ம நபர்கள் 10 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளனர். ஈரோடு, சூரம்பட்டி என்.ஜி.ஜி.ஓ. காலனி பகுதியைச் சேர்ந்த பாலம்மாள் என்பவர் மளிகைக் கடைக்குச் சென்றபோது அவரைப் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி 2 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளனர்.
மேலும், ஈரோடு அருகே சோலார் நொச்சிக்காட்டுவலசு பகுதியைச் சேர்ந்த ஜெசிமாபேகம் என்பவரின் வீட்டில் 40 பவுன், ஒரு லட்சம் ரொக்கமும் திருட்டு போயுள்ளது. தொடர்ந்து, ஈரோடு பகுதியில் கடந்த  ஒருவார காலத்தில் மட்டும் 60 பவுன் நகைகளை பொதுமக்கள் பறிகொடுத்துள்ளனர். மேலும், பல பகுதிகளில் நடைபெற்ற திருட்டு, வழிப்பறிச் சம்பவங்கள் தொடர்பாக போலீஸார்  வழக்குப் பதிவின்றி விசாரணை செய்து வருகின்றனர்.பெரும்பாலான திருட்டுச் சம்பவங்கள் அனைத்தும் பகலிலேயே நடைபெற்றுள்ளன. இதனால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். வழிப்பறி, திருட்டுச் சம்பவங்களில்  தொடர்புடையவர்களைப்  பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். இந்த சம்பவங்களைத் தடுக்கவும், குற்றவாளிகளைப் பிடிக்கவும் மாவட்ட எஸ்.பி.சக்திகணேசன்  தனிப்படை அமைத்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்  எதிர்பார்க்கின்றனர். 
இதுகுறித்து, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கூறியதாவது: 
ஈரோடு பகுதிகளில் கடந்த ஒருவாரத்தில் அதிகமான வழிப்பறிச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஒருவாரமாக நடைபெற்ற சம்பவங்களில் 60 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளன. இதைக் கண்டுபிடிக்கும்  நடவடிக்கையில் பின்னடைவே இருந்து வருகிறது. கடந்த காலங்களில் இரவு ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தி குற்றச் சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், தற்போது  அதுபோன்ற  நடவடிக்கைகள் குறைந்து போயுள்ளன. வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபடுவர்கள் பழைய குற்றவாளிகளா, வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களா என்பது குறித்த விசாரணை நடத்தப்படவேண்டும்.  பல மாதங்களுக்கு முன் தினமும் இரவு நேர வாகனச் சோதனை நடத்தப்பட்டு வந்தபோது, குற்றச் சம்பவங்கள் குறைந்திருந்தது. தற்போது, வாகனச் சோதனையிலும், இரவு ரோந்துப் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளதால் வழிப்பறி, திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதைத் தடுக்க காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com