ஓடத்துறை குளத்துக்கு முறைகேடாக தண்ணீர் நிரப்ப முயற்சி: விவசாயிகள் எதிர்ப்பு

கீழ்பவானி முதன்மைக் கால்வாயின் அவசரகால நீர் போக்கி மூலம், சட்டத்துக்குப் புறம்பாக ஓடத்துறை குளத்துக்கு

கீழ்பவானி முதன்மைக் கால்வாயின் அவசரகால நீர் போக்கி மூலம், சட்டத்துக்குப் புறம்பாக ஓடத்துறை குளத்துக்கு நீர் திறக்க முயற்சி செய்வதைத்  தடுத்து நிறுத்தக் கோரி, கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மனு அனுப்பியுள்ளனர். 
இதுகுறித்து, கூட்டமைப்புத் தலைவர் பி.காசியண்ணன், செயலாளர் கி.வடிவேல் ஆகியோர் அனுப்பிய மனு:
கீழ்பவானி முதன்மைக் கால்வாய் 35/6 மைலில் உள்ள அவசரகால நீர் போக்கி வழியாக சட்டத்துக்குப் புறம்பாக கடந்த மே 16 முதல் 20 வரை நீர் திறக்கப்பட்டு குளம் நிரப்பப்பட்டது. இதுகுறித்து முதல்வர் உள்பட  பல்வேறு துறையினருக்குப் புகார் மனுக்கள் அனுப்பிய பிறகே அப்பிரச்னை முடிவுக்கு வந்தது. இதனிடையே, ஓடத்துறை குளத்துக்கு பவானி ஆற்றிலிருந்து தண்ணீர் திறக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி வி.கே.வெங்கடாசலம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தர்.
கோவை மண்டல பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் அந்த மனு மீதான முடிவை எடுக்க வேண்டும் என  நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தலைமைப் பொறியாளர் அவ்வாறு திறக்க இயலாது என உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தார். 
அதில், ஓடத்துறை குளத்துக்கு மழை நீரும், கீழ்பவானி பிரதான வாய்க்காலின் கசிவு நீரை  மட்டுமே வழங்க முடியும் எனவும், அந்தக் குளம் வேறு எந்தப் பகுதிக்கும் குடிநீராதாரமாக  இல்லை என்ற நிலையில், இக்குளத்துக்கு தண்ணீரைத்  திறந்தால் கீழ்பவானி வாய்க்கால் செல்லும் பகுதிகளில் உள்ள அனைத்து குளங்களைச் சார்ந்தவர்களும் இதே கோரிக்கையை முன்வைக்கும் நிலை உருவாகும்.
இக்குளத்துப் பகுதியில் குடிநீர் ஆதாரத்துக்குத் தேவையான நடவடிக்கை மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்பட்டுள்ளதால், இக்குளத்தில் நீர் தேக்க குடிநீராதாரமும்,  நிலத்தடி நீர் உயர்வும் தேவை எனக் கூற முடியாது. எனவே,  ஓடத்துறை குளத்துக்கு நீர் திறக்க வேண்டியதில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக ஓடத்துறை குளத்துக்கு முறைகேடாக தண்ணீரைத் திறக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும். அனுமதிக்கக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com