தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைக்கப்படும்: பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றும் வகையில் வலுவான கூட்டணி

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றும் வகையில் வலுவான கூட்டணி அமைக்கப்படும் என பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பேசினார்.
ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே உள்ள டெக்ஸ்வேலி ஜவுளிச் சந்தையில் விசைத்தறி, கைத்தறி உற்பத்தி மற்றும் விற்பனையாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பேசியதாவது: 
மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் அந்தந்தப் பகுதியில் உள்ள மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன. மக்களின் தேவைகள் குறித்து தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்து அதை நிறைவேற்றுவோம். ஜவுளித் துறைக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவைச் சீரமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என அறிவிக்கிறார்.  இதற்கு அவரது கூட்டணிக் கட்சிகளே எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. மோடி தலைமையில் மிக வலிமை மிக்க கூட்டணியாக தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவாகியுள்ளது. சரியான தலைமை, திட்டங்கள் இல்லாத, ஊழல் பணத்தைப் பிரித்துக் கொள்ளும் கூட்டணி ஒருபுறம். முக்கியத் திட்டங்களை நிறைவேற்றும் அனைத்து மக்களுக்குமான உறுதியான கொள்கையோடு செயல்படும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மறுபுறம் என உள்ளன. 
திமுக, காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தை மேம்படுத்தும் கூட்டணி அல்ல. தமிழகத்துக்கு பிரதமர் மோடி என்ன செய்தார் என திமுக தலைவர் ஸ்டாலின் கேட்கிறார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுமதி, தமிழக ஜவுளித் துறைக்கு ரூ.1200 கோடி ஒதுக்கீடு, சென்னை மெட்ரோ ரயில் சேவைக்கு ரூ.2800 கோடி, மோனோ ரயில் திட்டத்துக்கு ரூ.3200 கோடி, தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு ரூ.23 ஆயிரம் கோடி, ரயில்வே துறைக்கு ரூ.20 ஆயிரம் கோடி, பிரதமர் வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ.3600 கோடி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ.828 கோடி, அம்ருத் நகர் வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.4700 கோடி, மாநில நெடுஞ்சாலைத் திட்டத்துக்கு ரூ.23 ஆயிரம் கோடி,  பாரத் மாலா திட்டத்துக்கு ரூ.14 ஆயிரம் கோடி,  மத்திய சாலை மேம்பாட்டுக்கு ரூ.2100 கோடி, இணயம் துறைமுகத்துக்கு ரூ.28 ஆயிரம் கோடி, சாகர் மாலா திட்டத்துக்கு ரூ.1.10 லட்சம் கோடி என தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஏழைகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டத்தில் 28 லட்சம் மகளிருக்கு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 
தமிழகத்துக்கு 13ஆவது நிதிக்குழு மூலம் ரூ.94,540 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், பாஜக ஆட்சியில் 14வது நிதிக்குழு மூலம் முத்ரா வங்கி கடன் திட்டம் உள்பட 6 திட்டங்கள் மூலம் ரூ.5 லட்சத்து 82 ஆயிரத்து 65 கோடி வழங்கியுள்ளது. ஆனால், காங்கிரஸ் - திமுக கூட்டணி இருந்தபோது மத்திய அரசில் ரூ.12 லட்சம் கோடிக்கு ஊழல்தான் நடந்துள்ளது. 
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும் வகையில் உறுதியான, வலுவான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைக்கப்படும். கடந்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைக் காட்டிலும், வரும் ஐந்து ஆண்டுகளில் அதிகத் திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேற்றப்படும் என்றார். 
பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், தேசியப் பொதுச் செயலர் முரளிதர் ராவ், முன்னாள் மாநிலத் தலைவர்கள் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், மாநிலப் பொதுச் செயலர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
முன்னதாக, ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மக்களவைத் தொகுதி வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதிலும் கலந்து கொண்டு பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com