பொக்லைன் இயந்திரங்களை சிறைபிடித்த பொதுமக்கள்

குண்டேரிப்பள்ளம் அணையின் அருகில் இருந்து தனியார் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல குழாய்

குண்டேரிப்பள்ளம் அணையின் அருகில் இருந்து தனியார் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் இயந்திரங்களை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.          டி.என்.பாளையம் வனப் பகுதிக்கு உள்பட்ட வினோபா நகர் பகுதியில் குண்டேரிப்பள்ளம் அணை உள்ளது. இந்த அணை கொங்கர்பாளையம், விநோபா நகர், தோப்பூர் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், வன விலங்குகளுக்கு நீர் ஆதாரமாகவும் திகழ்கிறது. மேலும், குண்டேரிப்பள்ளம் அணையிலிருந்து 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நேரடி பாசனமும், 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மறைமுக பாசனமும் பெற்று வருகிறது.
குண்டேரிப்பள்ளம் அணையின் அருகிலிருந்து அரசு சார்பில் கிணறு அமைத்து கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர் உள்ளிட்ட 5 ஊராட்சிகளுக்கு கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், குண்டேரிப்பள்ளம் அணையின் அருகில் தனி நபர்கள் பாசனத்துக்குத் தண்ணீர் கொண்டு செல்ல முயன்று வருவதாகவும், குழாய் அமைக்கவும், அணையின் அருகில் கிணறு தோண்டவும் முயற்சி செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், தனியார் தோட்ட உரிமையாளர்கள் பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு குழாய் அமைப்பதற்குப் பள்ளம் தோண்டுவதாகவும் இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், அப்பகுதியில் குழாய் பதிக்கும் பணிக்கு காவல் துறையின் பாதுகாப்புடன் திங்கள்கிழமை வந்த பொக்லைன் இயந்திரங்களை சிறைபிடித்து 5 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தனியார் தோட்ட உரிமையாளர்கள் குழாய் அமைத்து தண்ணீர் கொண்டு சென்றால் வனவிலங்குகளுக்கும், 5 ஊராட்சி உள்பட 15 க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு குடிநீர் இல்லாமல் போய்விடும் என்றும் கூறினர். 
தகவலறிந்த கோபி வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இப்பணி குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com