கனி மார்க்கெட் வியாபாரிகள் அனைவருக்கும் புதிய வணிக வளாகத்தில் கடை ஒதுக்கப்படும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

ஈரோடு கனி ஜவுளிச் சந்தையில் புதிதாக அமைய உள்ள வணிக வளாகத்தில் அனைத்து வியாபாரிகளுக்கும் கடை

ஈரோடு கனி ஜவுளிச் சந்தையில் புதிதாக அமைய உள்ள வணிக வளாகத்தில் அனைத்து வியாபாரிகளுக்கும் கடை ஒதுக்கீடு செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதியளித்தார். 
 ஈரோடு கனி மார்க்கெட் வியாபாரிகளிடம், ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வெங்கு மணிமாறன், பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரித்தார்.
 ஈரோடு மாவட்ட நூல் விற்பனையாளர்கள் சங்கம், ஜவுளி பதனிடும் ஆலைகள் உரிமையாளர்கள் சங்கம், கிளாத் மெர்ச்ண்டஸ் அசோசியேசன், கனி மார்க்கெட் வாரச்சந்தை அனைத்து வியாபாரிகள் சங்கம், அனைத்து தொழில், வணிகச் சங்கங்களின் கூட்டமைப்பு போன்ற பல்வேறு அமைப்பினரை அதிமுக வேட்பாளர் வெங்கு மணிமாறன் சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது, அவர்களிடம் கோரிக்கை குறித்த விவரங்களை சேகரித்தனர்.
 இதையடுத்து, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 ஈரோடு பகுதியில் சாய, சலவை, தோல் ஆலை கழிவு நீர் பிரச்னைக்கு மிக விரைவில் தீர்வு காணப்படும். 
 ஈரோடு மாநகரில் புதை சாக்கடை திட்டப் பணிகள் மிக விரைவாக முடிக்கப்படும். பணிகள் முடிந்த இடங்களில் முழு அளவில் சாலைகள் அமைக்க ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளன. விரைவில் அனைத்து சாலைகளும் முழுமையாக சீரமைக்கப்படும். 
 போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் இருந்து திண்டல் வரை மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் துவங்கும். ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப் பணிகள் 3 மாதங்களுக்குள் நிறைவடையும். மத்திய அரசுடன் இணைந்து தொழில் வளர்ச்சிக்காக பாடுபடுவோம்.
 ஈரோடு கனி ஜவுளிச் சந்தையில் மிக விரைவில் புதிய வளாகம் அமைத்து கடைகள் கட்டப்படும். தற்போது, இங்கு கடை வைத்துள்ள அனைவருக்கும் கடைகள் ஒதுக்கப்படும். அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும். இதில் கடைகள் கிடைக்காது என வியாபாரிகள் அச்சப்பட வேண்டியது இல்லை.
 மூன்று தளத்தில் ஜவுளி வணிக வளாகம் உருவாக்கப்பட்டு அனைத்து கடை வைத்துள்ள அனைத்து வியாபாரிகளுக்கும் கடை ஒதுக்கீடு செய்யப்படும் என்றார். 
 அப்போது, எம்எல்ஏக்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, பகுதி செயலர்கள் மனோகரன், ஜெகதீசன், முருகுசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com