ஈரோடு மாட்டுச் சந்தையில் 2ஆவது வாரமாக விற்பனை குறைவு

ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக 2 ஆவது வாரமாக மாடுகள் வரத்தும், விற்பனையும் குறைந்து காணப்பட்டது. 

ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக 2 ஆவது வாரமாக மாடுகள் வரத்தும், விற்பனையும் குறைந்து காணப்பட்டது. 
 தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தல் போன்ற முறைகேடுகளைத் தடுக்கும் வகையில்  வாகனச் சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாகனச் சோதனையின்போது ரூ. 50 ஆயிரத்துக்கும் மேல் ரொக்கம் எடுத்துச் சென்றால் தேர்தல் நடத்தை விதிமுறைப்படி அதிகாரிகளால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்னர் 2ஆவது வாரமாக கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை வியாழக்கிழமை கூடியது. 
 தேர்தல் விதிமுறைகளால் பணம் எடுத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், மாடுகளின் வரத்தும், விற்பனையும் குறைந்து காணப்பட்டது. 400 பசு மாடுகள், 300 எருமை மாடுகள், 200 கன்றுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன.  
 இதுகுறித்து மாட்டு சந்தை மேலாளர் முருகன் கூறியதாவது: 
கடந்த 2 வாரமாக, தேர்தல் ஆணையம் கெடுபிடியால் வியாபாரிகள் பணம் எடுத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் 2 வியாபாரிகளிடம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உரிய ஆவணங்களைக் காண்பித்து, பணத்தை பெற்றுள்ளனர். 10-க்கும் மேற்பட்ட வியாபாரிகளிடம் சோதனையின்போது ஆவணங்கள் இருந்ததால் பணத்தை அனுமதித்தனர்.
 இந்த வாரம் சந்தைக்கு வந்த 3 பேரிடம் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். அதில், ஒரு வியாபாரி ரூ. 52 ஆயிரம் கொண்டு வந்துள்ளார். ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் 2 ஆயிரம் வைத்திருந்ததற்காக பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். இந்த நெருக்கடியால் மாடு வாங்க வருவோர் எண்ணிக்கையும், மாடுகளின் விற்பனையும் சரிந்துள்ளது.
 எங்களது சந்தையின் உரிம எண், மாநகராட்சியால் சந்தைக்கு வழங்கப்பட்ட அனுமதி விவரம், மாடு வாங்க கொண்டு வரப்பட்ட தொகை அல்லது மாட்டை விற்று வாங்கிச் செல்லும் தொகை குறித்த விவரங்களை எழுதி, சீல் வைத்து, கையெழுத்திட்டு வழங்குகிறோம். இதை பரிசோதனை அதிகாரிகள் ஏற்கின்றனர். இருப்பினும் விற்பனை சரிந்துள்ளது கவலை அளிக்கிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com