இன்புளூயன்சா வைரஸ் கிருமிகளிடமிருந்து  பாதுகாத்துக்கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

நீலகிரி மாவட்ட மக்கள் இன்புளூயன்சா வைரஸ் கிருமிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்

நீலகிரி மாவட்ட மக்கள் இன்புளூயன்சா வைரஸ் கிருமிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவுறுத்தியுள்ளார்.
  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி:
   இன்புளூயன்சா வைரஸ் கிருமிகள் மூலமாக காய்ச்சல்  ஏற்படுகிறது. சளி, இருமல், தும்மல்,  தலைவலி, தொண்டை வலி 
போன்றவை இன்புளூயன்சா தொற்றின் அறிகுறிகளாகும். ஒருசிலருக்கு இத்தகைய அறிகுறிகளுடன் வாந்தி அல்லது வயிற்றுப் போக்கும் ஏற்படலாம்.  கிருமித் தொற்று ஏற்பட்டவர் இருமும் போதும் அல்லது தும்மும்போதும் வெளிப்படும் நீர்த்திவலைகள் மூலம் நோய்க்கிருமிகள் காற்றில் பரவுகிறது. இந்த நீர்த்திவலைகள் படிந்த பொருள்களை தொடும்போது கைகளில் கிருமி  ஒட்டிக் கொள்கிறது. கைகளை கழுவாமல் கண்கள், மூக்கு, வாயைத் தொடும்போது கிருமித் தொற்று ஏற்படுகிறது.
   பன்றிகளிடமிருந்து மனிதர்களுக்கு இந்நோய்த் தொற்று ஏற்படுவதில்லை. இன்புளூயன்சா காய்ச்சலும் பன்றிகளிடமிருந்து மற்றவர்களுக்கு தொற்றுவதுமில்லை.  தொடக்க காலத்தில் இந்நோய் பன்றிகளுக்கே ஏற்பட்டதால் இதை பன்றிக் காய்ச்சல் என்கிறோம்.  இன்புளூயன்சா வைரஸ் கிருமிகள் தரைப் பரப்பு, கதவு, மேசைகள் போன்ற பரப்புகளில் பல மணி நேரம் இருக்க வாய்ப்புள்ளது.  
  குளிர்ந்த இடங்களில் இரண்டு நாள்கள் வரை கூட கிருமிகள் இருக்கலாம்.  கதவு, மேசை, கைப்பிடிகள்,  நாற்காலிகள், மின்சார சுவிட்ச்கள்,  தொலைபேசி போன்றவற்றை தினமும் ஒரு முறையாவது  கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வதன் மூலமும், அவ்வப்போது கழுவுவதன் மூலமும் நோய்த் தொற்றை பெருமளவில் தடுக்கலாம்.
   இருமும் போதும், தும்மும்போதும் வாய், மூக்கைக் கைக்குட்டை அல்லது துணியால்  மூடிக்கொள்ள வேண்டும்.  இருமல் மற்றும் தும்மலின்போது பயன்படுத்திய கைக்குட்டை  மற்றும் இதர துணிகளை நன்கு துவைத்து வெயிலில் காயவைத்துப் பயன்படுத்த வேண்டும். அதேபோல, கை குலுக்குதல் மற்றும் தழுவுவதையும் தவிர்க்க வேண்டும். எவ்விதமான காய்ச்சலாக இருந்தாலும் மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும். மருத்துவ ஆலோசனைகள் இல்லாமல் தாமாகவே மருந்து உட்கொள்ளக் கூடாது. நோயின் அறிகுறிகள் இருந்தால் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்து வீட்டிலேயே ஓய்வில் இருக்க வேண்டும். 
இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு   0423-2444051, 79047 78300 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com