நடப்பு ஆண்டுக்கான கூட்டுறவுக் கடன் இலக்கு ரூ. 1,500 கோடி! உதகையில் நடைபெற்ற விழாவில் ஆட்சியர் தகவல்

நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான கூட்டுறவு சங்கக் கடன்  இலக்கு ரூ. 1,500 கோடி என்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான கூட்டுறவு சங்கக் கடன்  இலக்கு ரூ. 1,500 கோடி என்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில்  மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் 65வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா சனிக்கிழமை  நடைபெற்றது. மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூணன், உதகை சட்டப் பேரவை உறுப்பினர் ஆர்.கணேஷ், குன்னூர் சட்டப் பேரவை  உறுப்பினர் சாந்தி ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்  பேசியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் 13 கூட்டுறவு சங்கங்களைக் கொண்டு 146 கூட்டுறவு மையங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் விவசாயிகளின் நலனைக் காக்கும் பொருட்டு பல்வேறு விவசாய கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. 
2018-18 நிதியாண்டில் இதுவரை  ரூ. 32.64 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் நகர கூட்டுறவு வங்கிகள் மூலமாக மக்களுக்கு நகைக்கடன், வீட்டுமனைக் கடன், மாற்றுத் திறனாளிகளுக்கான கடன் போன்ற பல்வேறு கடனுதவிகள் நடப்பாண்டில் இதுவரை ரூ.10.56 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளன.
விவசாயப் பயன்பாட்டுக்காக  தும்மனட்டி, எடக்காடு, ஹெத்தையம்மன், கூடலூர், எருமாடு ஆகிய 5 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக, மண் பரிசோதனை, நீர்ப் பரிசோதனை ஆய்வு மையங்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. 
56 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக விவசாயிகளுக்குத் தேவையான உபகரணங்களான டிராக்டர், டிரில்லர், விசைத்தெளிப்பான், தேயிலை பறிப்பு இயந்திரம் போன்றவை குறைந்த வாடகைக்கு வழங்கப்படுகின்றன. 
82 கூட்டுறவு சங்கங்களில் பொது சேவை மையங்கள் அமைக்கப்பட்டு, கிராமப்புற  மக்களுக்குத் தேவையான அனைத்து சான்று வசதிகளையும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் 3 அம்மா மருந்தகங்கள், 2 கூட்டுறவு மருந்தகங்கள் துவக்கப்பட்டு 15 சதவீத தள்ளுபடி விலையில் மக்களுக்கு தரமான மருந்துகள் வழங்கப்படுகின்றன. நடப்பாண்டில் ரூ. 94.97 லட்சத்துக்கு மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
தமிழக முதல்வரின்  விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பைப் தொடர்ந்து, இம்மாவட்டத்தில் அனைத்து கூட்டுறவு வங்கிகள் மூலமாக 37,579 உறுப்பினர்களின் விவசாயக் கடன் ரூ. 15,238 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 
கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக பொது விநியோகத் திட்டம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 257 முழு நேரக் கடைகளும் 95 பகுதி நேரக் கடைகளும் செயல்பட்டு வருகின்றன. மேலும் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள பழங்குடியினக் கிராமங்களுக்கு 14 நடமாடும் நியாய விலைக் கடைகள் மூலமாக பொருள்கள் விநியோகிக்கப்படுகின்றன. 
வெளிச் சந்தைகளில் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக சுயஉதவிக் குழுக்கள் மாவட்டத்தில் மகளிருக்கான சிறப்பான பணிகளைச் செய்து வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான கூட்டுறவுக் கடன்  இலக்கு ரூ. 1,500 கோடியாகும். முதல் முறையாக கூட்டுறவு வங்கிகளில் தூய்மை பாரத இயக்கம்  மூலம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. சுயஉதவிக் குழுக்களை ஊக்குவிக்கும் வகையில் வங்கிகள் அதிக அளவில் கடனுதவி வழங்க வேண்டும். 
நீலகிரி மாவட்டம் இயற்கை வேளாண்மை நிறைந்த மாவட்டமாக உள்ளது. எனவே  கூட்டுறவு அமைப்புகளின் மூலம் வழங்கப்படும் இடுபொருள்கள்  இயற்கை சார்ந்த இடுபொருள்களாகவே இருக்கும். முதல் கட்டமாக 25 சதவீத இடுபொருள்கள் இயற்கை இடுபொருள்களாக வழங்கப்பட உள்ளன. 
எனவே கூட்டுறவு சங்க உறுப்பினர்கள்அரசின் திட்டங்களைப் பயன்படுத்தி மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று ஆட்சியர்  குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து,  18 சுயஉதவிக் குழு கடனாக 200 உறுப்பினர்களுக்கு ரூ. 97 லட்சம், 9 டாப்செட்கோ மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ. 47 லட்சம்,  3 டாப்செட்கோ ஆடவர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ. 14.25 லட்சம்,  மத்திய கால கறவை மாட்டுக்கடனாக 33 உறுப்பினர்களுக்கு ரூ. 15.7 லட்சம் என மொத்தம் 30 குழுக்களைச் சார்ந்த 357 உறுப்பினர்களுக்கு ரூ. 1.74 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர்  வழங்கினார். 
அத்துடன்  கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும், பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற கூட்டுறவுத் துறைப் பணியாளர்களின் மாணவ, மாணவியருக்கு பரிசுகளையும் வழங்கிய ஆட்சியர், சிறப்பாகப் பணியாற்றிய கூட்டுறவு சங்கங்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர், சட்டப் பேரவை உறுப்பினர்கள் முன்னிலையில் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், அரசுத் துறை அலுவலர்கள் கூட்டுறவு வார விழா உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். 
இந்த நிகழ்ச்சியில் நீலகிரி மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் லோகநாதன், துணைப் பதிவாளர் நீலா ஆகியோருடன்  கூட்டுறவுத் துறை அலுவலர்கள், சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com