நீலகிரி மாவட்டம் தொடங்கப்பட்ட 150ஆவது ஆண்டு கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டத்தின் 150ஆவது ஆண்டு விழா மற்றும் பழங்குடியினர் விழாவை தொடக்கிவைத்து,

நீலகிரி மாவட்டத்தின் 150ஆவது ஆண்டு விழா மற்றும் பழங்குடியினர் விழாவை தொடக்கிவைத்து, 960 பயனாளிகளுக்கு  ரூ. 6.75 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திங்கள்கிழமை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:
இம்மாவட்டத்துக்கு குன்றாப்புகழ் சேர்க்கும் 150ஆவது ஆண்டு விழா, இம்மலை மாவட்டத்து பழங்குடியின மக்களான மண்ணின் மைந்தர்களுக்கு மகுடம் சூட்டும் விழாவான பழங்குடியினர் விழா ஆகிய இருபெரும் விழாக்கள் மகிழ்ச்சிக்கு உரியவையாகும். 
இந்நாளில், தபால் துறையின் மூலமாக இம்மாவட்டத்தின் பாரம்பரியத்தை பறை சாற்றும் வகையில் சிறப்புப் புகைப்படங்கள் அடங்கிய சிறப்புத் தபால் உறை வெளியிடப்படுவதும் பெருமைக்குரிய அம்சமாகும்.
 தமிழக அரசின் சார்பில் இந்த  மண்ணின் மைந்தர்களுக்கு வீடு கட்டும் திட்டம், விலையில்லா கறவை மாடுகள் வழங்குதல், தேன் சேகரிப்புத் தொழில், பெட்டிக் கடை வைத்தல், கோழிப்பண்ணைத் தொழில் செய்தல், தெளிப்பான் வழங்குதல், டிராக்டர் மற்றும் பவர் டிரில்லர் முதலிய இயந்திரங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதுடன், அனைத்துத் திட்டங்களும் மாநிலத்தில் முதல்முறையாக ஒவ்வொரு திட்டத்துக்கும் சாதகமான பகுதிகளையும், பயனாளிகளையும் பல்வேறு துறை அலுவலர்கள் மூலமாகத் தேர்வு செய்து அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளும்  அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலமாகப் பெண்களே அதிக அளவில் பயன்பெறுகின்றனர். 
 நீலகிரி மாவட்டத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் சாலைகள், நடைபாதை, கால்வாய்கள், மழைநீர்க் கால்வாய்கள், கட்டடங்கள், குடிநீர்த் திட்டங்கள், கல்வெட்டுகள், தடுப்புச் சுவர்கள், தெருவிளக்குகள், பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் மற்றும் தனி நபர் வீடுகள் போன்ற பணிகளுக்காக 2011 முதல் 2016 வரை உதகை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 288 பணிகளுக்கு ரூ. 35.86 கோடியும், குன்னூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 173 பணிகளுக்கு ரூ. 31.62  கோடியும், கூடலூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 104 பணிகளுக்கு ரூ. 5.4 கோடியும், நெல்லியாளம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 152  பணிகளுக்கு ரூ. 10.67 கோடியும்,  அனைத்துப் பேரூராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் 1,340 பணிகளுக்கு ரூ. 85.21 கோடியும் மற்றும் அனைத்து ஊராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் 34,900 பணிகளுக்கு ரூ. 386.39 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. 
அத்துடன் கடந்த இரண்டு ஆண்டுகளில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில், சாலைப் பணிகள், குடிநீர்த் திட்டப் பணிகள், தெரு விளக்குப் பணிகள் உள்ளிட்ட 16,147 பணிகள், ரூ. 282 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டம், தோட்டக்கலைப் பயிர் சாகுபடியில் கண்டுள்ள முன்னேற்றத்தின் காரணிகளாக விவசாய ரசாயன உரங்களும், அனைத்து வகைப் பயிர்ப் பாதுகாப்பு மருந்துகளும் இருந்து வரும் நிலையில்,  சுற்றுச்சூழல் பாதிப்பதுடன் மண் வளம் குறைந்து, உயிரினங்களுக்கு ஊறு விளைவிக்கும் நிலை உள்ளது.  இந்நிலையைத் தடுக்கும் விதமாக, 150ஆவது ஆண்டு விழா கொண்டாடும் இத்தருணத்தில் இம்மலை மாவட்டத்தை இயற்கை வேளாண் மாவட்டமாக அறிவிப்பதில் பெருமை கொள்வதுடன், இதை ஊக்கப்படுத்தும்பட்சத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளில் முற்றிலுமாக இயற்கை வேளாண்மை மாவட்டமாக நீலகிரி மாறும் என்றார்.
முன்னதாக தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி உதகையில், தமிழகம் மாளிகையில் பெரியாரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மரியாதை செலுத்தினார். 
தொடர்ந்து, பிரீக்ஸ் பள்ளியின் புனரமைப்புப் பணிக்காக ரூ. 37.5 கோடி மதிப்பில் அடிக்கல் நாட்டி,  பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளையும் அமைச்சர் வேலுமணி  நட்டார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாநிலங்களவை உறுப்பினர்கள் கே.ஆர்.அர்ஜுனன்,  ஏ.கே.செல்வராஜ், நீலகிரி மக்களவை  உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன்,  குன்னூர் சட்டப் பேரவை உறுப்பினர் சாந்தி ராமு,  தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் இணையத் தலைவர் அ.மில்லர், தமிழ்நாடு மேற்கு மண்டல அஞ்சலகத் தலைவர்அம்ரேஷ் அபிமன்யூ , தமிழகத் தலைமை வனப் பாதுகாவலர் தீபக் ஸ்ரீவத்ஸவா, நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சண்முகப்ரியா, மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன்,  மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் மற்றும் பல்வேறு அரசுத் துறைச் அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com