முக்குருத்தி காப்புக்காடு: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும்,  வன விலங்குகள்,  அரிய பறவைகளைப் பாதுகாக்கவும்

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும்,  வன விலங்குகள்,  அரிய பறவைகளைப் பாதுகாக்கவும் 1877ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நீலகிரி  கானுயிர் மற்றும் சுற்றுச்சூழல் சங்கத்தை மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 140 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட இந்த சுற்றுச்சூழல் சங்கத்தை தனியார் சிலர் முறைகேடுகளுக்குப் பயன்படுத்தியதால் ஏற்பட்ட சச்சரவு இதன்மூலம் முடிவுக்கு வந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில்  உள்ள இயற்கை வனப்பு மிக்க பகுதிகளுள் முக்குருத்தியும் ஒன்று. இங்குள்ள ஏரியில் "ரெயின்போ டிரவுட்' எனப்படும் நன்னீர் மீன்கள்  உள்ளன. ஆங்கிலேயர்கள் இப்பகுதியில் மீன்பிடித்தலை விளையாட்டாக நடத்தி வந்தனர். 
இதற்காக நீலகிரி  கானுயிர் மற்றும் சுற்றுச்சூழல் சங்கம் என்ற அமைப்பை கடந்த 1877ஆம் ஆண்டில் தொடங்கினர்.  
இச்சங்கத்தின் மூலம் மீன் பிடித்தலுக்காக "கேம் லைசென்ஸ்' என்ற கட்டண அடிப்படையிலான உரிமம் வழங்கப்பட்டதோடு, இவர்கள் தங்குவதற்காக "கேம் ஹட்' என்ற தங்கும் விடுதியும் உருவாக்கப்பட்டது. 
ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகு, இச்சங்கம் நீலகிரி மாவட்ட ஆட்சியரை கெளரவத் தலைவராகக் கொண்டும், மாவட்ட வன அலுவலரை துணைத் தலைவராகக் கொண்டும் செயல்பட்டு வந்தது. ரிச்சர்டு ராட்கிளிப் என்பவர் இதன் துணைத் தலைவராக இருந்து வழிநடத்தி வந்தார். அப்போது வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணிகள் இச்சங்கத்தால் மேற்கொள்ளப்பட்டன.
அவரது மறைவுக்குப் பின்னர் நீலகிரி சுற்றுச்சூழல் சங்கத்தில் பல்வேறு பிளவுகள் ஏற்பட்டன.  இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வந்த சங்க நிர்வாகிகள் தேர்தலில், உறுப்பினர்களை ஒரு தரப்பினர் வசமாக்கிக் கொண்டு எளிதில் வெற்றி பெற்று வந்ததால் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையும் நிறுத்தப்பட்டு விட்டது. 
இந்நிலையில், நீலகிரி  கானுயிர் மற்றும் சுற்றுச்சூழல் சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், முக்குருத்தி ஓய்வு விடுதியில் சிலருக்கு மட்டுமே தங்கும் வாய்ப்பு அளிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. அதையடுத்து,  இச்சங்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த அர்ச்சனா பட்நாயக் வெளிப்படையாக அறிவித்தார்.  
அதன் பிறகு இச்சங்கம் செயல்பட்டு வந்தாலும், யாருடைய கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்பதே தெரியாமலே தன்னிச்சையாகச் செயல்பட்டு வந்தது.  
எனவே, இச்சங்கத்தின் மீதும், சங்க உறுப்பினர்களின் மீதும் வழக்குரைஞர் சீதாராமன் உள்ளிட்டோர் தொடுத்த பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தன.
இச்சங்கத்தின் செயல்பாடுகள் நாளடைவில் மோசமடைந்ததாலும்,  சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு இந்தச் சங்கத்தால் எந்தப் பயனுமில்லை என்பதாலும், இதைக் கலைத்து விடலாம் என்று, தற்போதைய மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பரிந்துரைத்தார். 
ஆனால், ஆட்சியரின் இந்தப் பரிந்துரை விவரம் கசிந்து விட்டதால் இச்சங்கத்தின் 10 நியமன உறுப்பினர்களில் 6 பேர் தங்களது பதவியை ராஜிநாமா செய்து விட்டனர். மேலும் இருவர் ராஜிநாமா செய்யப் பேவதாகவும் அறிவித்தனர். 
குழப்பமான இச்சூழலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன்,  வனத் துறையினர், காவல் துறையினரின் துணையோடு முக்குருத்தி ஓய்வு விடுதியில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகத் தெரியவந்துள்ளதால், காப்புக்காட்டுப் பகுதிக்குள் அமைந்துள்ள இந்த ஓய்வு விடுதிக்கும், காப்புக்காட்டுப் பகுதிகளிலும் வனத் துறையினரைத் தவிர வேறு எவரும் நுழையக் கூடாது என்று உத்தரவிட்டார். 
அத்துடன்  இந்த ஓய்வு விடுதியை உடனடியாக மூடுமாறும்,  நீலகிரி சுற்றுச்சூழல் சங்கத்தை மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென்றும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 3ஆம் தேதிக்கு அவர் ஒத்திவைத்துள்ளார். 
மேலும், நீலகிரி கானுயிர் மற்றும் சுற்றுச்சூழல் சங்கத்தில்  உறுப்பினர்களாக உள்ள 951 பேர் மீது தனிப்பட்ட முறையில் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த உத்தரவையடுத்து சுற்றுச்சூழல் சங்கத்திலுள்ள பொருள்கள் மற்றும் ஆவணங்களைச் சரிபார்க்கும் பணி புதன்கிழமை (செப்டம்பர் 19) காலைமுதல் நடைபெற்று வருகிறது. தவிர, முக்குருத்தி ஓய்வு விடுதியும் உடனடியாக மூடப்பட்டு விட்டது. 
இதன்மூலமாக, நீலகிரி கானுயிர் மற்றும் சுற்றுச்சூழல் சங்கத்தில் நிலவி வந்த பல்வேறு பிரச்னைகளுக்கு முடிவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், 140 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு சங்கம் கலைக்கப்படுவது  உண்மையான சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com