கெத்தை பகுதியில் கோயில், வீட்டை சேதப்படுத்திய காட்டு யானைகள்

மஞ்சூர் அருகே கெத்தை மின் வாரிய குடியிருப்புப் பகுதியில் நுழைந்த காட்டு யானைகள் கோயில், வீட்டை சேதப்படுத்தின.


மஞ்சூர் அருகே கெத்தை மின் வாரிய குடியிருப்புப் பகுதியில் நுழைந்த காட்டு யானைகள் கோயில், வீட்டை சேதப்படுத்தின.
நீலகிரி மாவட்டம், மஞ்சூரில் இருந்து கோவைக்கு கெத்தை வனப் பகுதியைக் கடந்துசெல்லும் சாலை உள்ளது. அடர்ந்த வனப் பகுதிகளைக் கொண்ட இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன.
இந்த வனப் பகுதி வழியில் 48 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.
கேரளத்தில் இருந்தும், கோவை உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் அதிக அளவில் வாகனங்கள் வந்து செல்கின்றன. கடந்த சில வாரங்களாக அவ்வப்போது பெய்து வந்த மழை காரணமாக சாலையோரங்களில் அதிக அளவில் புற்கள் வளர்ந்து, பசுமையாக காட்சி அளிக்கிறது. உணவைத் தேடி கடந்த சில வாரங்களாக இப்பகுதிகளில் யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளன.
இந்நிலையில், வெள்ளியங்காடு பகுதியில் இருந்து 6 காட்டு யானைகள் கெத்தை மின் வாரிய குடியிருப்புப் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை நுழைந்தன.
அந்தப் பகுதியில் உள்ள ராஜம்மா என்பவரது வீட்டையும், அப்பகுதியிலுள்ள மாரியம்மன் கோயிலையும் உடைத்து சேதப்படுத்தின.
இது குறித்து தகவலறிந்த குந்தா வனச் சரகர் சரவணக்குமார் தலைமையில் வனத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், தொடர்ந்து காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க தொடர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com