மார்க்சிஸ்ட் சார்பில் ஜனவரி 27 இல் நீலகிரியில் கண்டன ஆர்ப்பாட்டம்

கூடலூர் ஜென்மம் நிலங்களை வனத் துறைக்கு வகை மாற்றம் செய்யும் சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி

கூடலூர் ஜென்மம் நிலங்களை வனத் துறைக்கு வகை மாற்றம் செய்யும் சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நீலகிரி மாவட்டம் முழுவதும் ஜனவரி 27 ஆம் தேதி பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்ட குழு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள ஜென்மம் நிலங்களில் நீண்டகாலமாக விவசாயிகள் பயிர் செய்தும், வாழ்ந்தும் வருகின்றனர்.
 இந்நிலங்களில் வசிப்போருக்கு நிலப்பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக இருந்து வருகிறது. 
இதை வலியுறுத்தி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. 
மக்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற நிலப்பட்டா வழங்க முன்வராத தமிழக அரசு அண்மையில் ஜென்மம் நிலங்கள் முழுவதையும் வனத் துறைக்கு வகை மாற்றம் செய்யும் வகையில் புதிய சட்டத் திருத்தத்தை சட்டப் பேரவையில் ஜனவரி 8 ஆம் தேதி நிறைவேற்றியுள்ளது.
இந்த நடவடிக்கை தமிழக அரசு மக்களின் மீது தொடுத்துள்ள நேரடியான தாக்குதலாகும். 
ஏற்கெனவே தமிழக அரசின் அரசாணைகளில் மலைப் பகுதிகளில் நிலப் பட்டா வழங்கத் தடை, தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம், வன விலங்குகள், சரணாலய சட்டங்கள், வன உரிமைச் சட்டம் அமலாகாத நிலை என பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வரும் நிலையில் தமிழக அரசு இத்தகைய ஒரு சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்திருப்பது இப்பகுதி மக்களின் நிலைமையை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.
எனவே, ஜென்மம் நிலங்களை வனத் துறைக்கு வகை மாற்றம் செய்யும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தத்தை உடனடியாகக் கைவிட வேண்டும். 
மலைப் பகுதிகளில் பட்டா வழங்கத் தடை விதிக்கும் அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும். 
வன உரிமைச் சட்டத்தை உடனடியாக அமலாக்கி பழங்குடி மக்களுக்கு நிலப்பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 27 ஆம் தேதி மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளது.
எனவே, இப்போராட்டங்களில் அனைத்து அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் பங்கேற்று போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com