மஞ்சூர் பகுதியில் திரியும் காட்டு யானைகளால் மக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம், மஞ்சூர் பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

நீலகிரி மாவட்டம், மஞ்சூர் பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களைச் சுற்றிலும் அடர்ந்த வனப் பகுதிகள் உள்ளன. இங்கு காட்டு யானைகள், சிறுத்தைப் புலி, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. 
கடந்த சில மாதங்களாக வனப் பகுதியில் போதிய பசுந்தீவனம் கிடைக்காததால் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் இரவு நேரங்களில் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதேபோல் சிறுத்தைப் புலிகள் குடியிருப்புக்குள் புகுந்து ஆடு, மாடுகளை கடித்து கொன்று வருவது தொடர் கதையாக உள்ளது.
இந்தநிலையில் மஞ்சூர் அருகே உள்ள முள்ளிமலைகண்டி, காந்திபுரம், கெரப்பாடு, முள்ளிகூர்ஆடா, லாரன்ஸ் ஆகிய பகுதிகளில் குட்டியுடன் கூடிய 5 காட்டு யானைகள் கடந்த சில நாள்களாக சுற்றித்திரிந்து வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வெளியே வர முடியாமல் வீட்டிலேயே தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த யானைகள் அப்பகுதியில் 10 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மேரக்காய், கேரட் உள்ளிட்ட காய்கறிகளை நாசம் செய்துள்ளன. 
இதுகுறித்து தகவல் அறிந்த வனத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்தக் காட்டு யானைகளை விரட்டியடித்தனர்.
இதையடுத்து அந்த யானைகள் அவலாஞ்சி அணை ஓரத்தில் நேற்று முகாமிட்டிருந்தன. இந்த யானைகள் மீண்டும் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைய வாய்ப்புள்ளதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். 
எனவே வனத் துறையினர் அசம்பாவிதம் ஏதும் நடக்கும்  முன் இந்த யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com